இ.பி.எஸ்-ன் முடிவு., பாஜக தலைவர்கள் அதிருப்தி... என்.டி.ஏ கூட்டணிக்கு சறுக்கல்.?
அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்த மறுநாளே, அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்தார். டெல்லி புறப்படவிருந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்தது ஏன்? அப்போது என்ன பேசப்பட்டது என தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. அதாவது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் நான் இருக்க மாட்டேன் என, டிடிவி தினகரன் ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
அதேநேரம் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமோ மீண்டும் ஒன்றுபட்ட அதிமுக என, தனது விருப்பத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். அதோடு அதிமுக பொதுக்குழுவில் தனக்குச் சாதகமான முடிவு கிடைக்கும் என்றும், அதிமுக சீனியர் தலைவர்கள் சிலர் தனக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள் என்றும் அவருக்கு எதிர்பார்ப்பு இருந்தது. இதேபோல், பாஜகவும் அதிமுகவை எப்படியாவது ஒன்றிணைத்துவிட வேண்டும், ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் நம்முடன் வந்துவிட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெறும் என கணக்குப் போட்டு வைத்திருந்தது.
இந்தச் சூழலில்தான், கூட்டணியில் இணையும் கட்சிகளைத் தீர்மானிக்கவும், இடப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், எடப்பாடி கே பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக பொதுக்குழு. இதன் மூலம் ஓ. பன்னீர்செல்வம் மட்டுமல்லாமல், பாஜகவின் கனவும் சிதைந்துபோனது.
இந்த நிலையில்தான், எடப்பாடி கே பழனிசாமியை பாஜக நிர்வாகிகளுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். முதலில் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி கே பழனிசாமி, அதன்பின்னர் நயினார் நாகேந்திரனுடன் மட்டும் தனியாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி எக்காரணம் கொண்டும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இருவரையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள முடியாது என திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. அதேபோல், எந்தெந்த கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரலாம், எப்படி தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்பதையும் அதிமுகதான் முடிவு செய்யும் எனவும் திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதனைக் கேட்டு நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை அதிமுக நிராகரித்தால், அவர்களை பாஜகவின் பங்காளிகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், எடப்பாடி கே பழனிசாமியின் இந்த முடிவு, அந்த நுழைவாயிலுக்கும் தடை போட்டுவிட்டது என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டெல்லியில் பாஜக தேசியத் தலைவர்களான ஜே.பி. நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரைச் சந்திக்கும் நயினார் நாகேந்திரன், இதுகுறித்து ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
அதேநேரம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள், யாருடன் கூட்டணியில் இணைவார்கள் என்பதும், பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என, அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தமிழகம் வரவிருக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா, கூட்டணி முயற்சிகளை நல்லபடியாக முன்னெடுப்பார் என்பதே அவர்களின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.

