ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இ.பி.எஸ்-ன் 'NOTA' ப்ளான்.. நாதகவுக்கு எதிரான வியூகமா?
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொகுதியில்,2021 பொதுத்தேர்தல் மற்றும் 2023-ல் நடந்த இடைத்தேர்தல் என கடந்த இரண்டு முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், இந்த முறை திமுக போட்டியிட விரும்பியதால், தொகுதியை திமுகவுக்கே விட்டுக்கொடுத்தது காங்கிரஸ்.
அதன்படி, ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளராக சந்திரகுமாரை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது போன்றே இந்த தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தது. தொடர்ந்து, பாஜகவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து தேர்தல் களம் திமுக Vs நாம் தமிழர் என மாறியது. திமுக, நாதகவினர் மிகத் தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாதகவின் தேர்தல் வியூகம்..
நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்கியிருந்தாலும், தேர்தலைப் புறக்கணித்திருக்கும் அதிமுக, பாஜகவின் வாக்குகளைக் கவர்வதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. சீமானின் பெரியார் எதிர்ப்பையும்கூட அதற்கான யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. தவிர, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக தேர்தலைப் புறக்கணித்திருந்த நிலையில், சீமான், நேரடியாகவே பொதுக்கூட்ட மேடைகளில், அதிமுக, தேமுதிக தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டார். அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்தார். அது விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவின் வாக்குகளைப் பெறுவதற்கான உத்தியாகவே பார்க்கப்பட்டது.
2021 பொதுதேர்தலில், 8,216 வாக்குகளைப் பெற்ற நாதக, இடைத்தேர்தலில் 10,602 வாக்குகளைப் பெற்றது..,கணிசமான வாக்குகள் அதிகரித்திருந்தது..,இந்தநிலையில், ஈரோடு கிழக்கிலும் அதிமுக, பாஜக வாக்குகளைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருகிறது நாதக. அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி நேரடியாக அதிமுகவினரிடம் ஆதரவு கேட்டு வருகிறார்.
``உங்கள் கட்சி தேர்தலைப் புறக்கணித்திருக்கும் நிலையில் எனக்கு வாய்ப்புத் தாருங்கள்’’ என வாக்குச் சேகரித்து வருகிறார்.
அதிமுக கையில் எடுத்திருக்கும் யுக்தி..
இதுஒருபுறமிருக்க, ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் அதிமுக வேறொரு யுக்தியைக் கையில் எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, அதிமுக நிர்வாகிகள், ஆதரவாளர்கள், வாக்காளர்களிடம் நோட்டோவுக்கு வாக்களிக்கச் சொல்லி தலைமையிடமிருந்து உத்தரவு பறந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான பிரசாரங்களையும் நிர்வாகிகள் வாயிலாக முன்னெடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான பின்னணி என்ன? கட்சி வட்டாரத்தில் பேசினோம்.
``தற்போது களம் திமுகVs அதிமுக என்றிருக்கிறது. திமுகவுக்கு எதிராக நாம் தமிழருக்கு ஆதரவாக நாங்கள் வாக்களித்தால் அது தேர்தல் புறக்கணிப்பு ஆகாது. தவிர, நாம் தமிழர் அதிக வாக்குகள் பெறும் பட்சத்தில் அது எங்களுக்கு பின்னடைவாகத்தான் அமையும். தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி நாங்கள்தான் என கிளைம் செய்ய ஆரம்பிப்பார்கள். அது எங்கள் கட்சி இமேஜை காலி செய்யும்.
அதேவேளை, நோட்டாவுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவாக எவ்வளவு பேர் வாக்களித்திருக்கிறார்கள் பாருங்கள் என அதைவைத்து நாங்கள் பேசமுடியும். எங்கள் தரப்பிருந்து நாம் தமிழருக்கு செல்லும் வாக்குகளையும் பிரிக்கமுடியும். இன்னும் சொல்லப்போனால், கடந்த தேர்தலில், நாம் தமிழர் கிட்டத்தட்ட 11 வாக்குகள் வாங்கியிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில், எங்கள் தரப்பிலிருந்து நோட்டாவுக்கு அதிகளவுக்கு வாக்குகள் சென்று நாதக வாங்கும் வாக்குகளைவிட நோட்டா அதிகமாக வாங்கினால், எங்கள் தேர்தல் புறக்கணிப்பை இன்னும் நியாயப்படுத்தவும்முடியும். அதுதான் எங்கள் கட்சியின் யுக்தி’’ என்கிறார்கள்.