அதிமுக விவகாரம்.. அமித் ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு.. டி.டி.வி.தினகரன் கேள்வி?
டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது தமிழக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது தமிழக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவும் நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் அண்மையில் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் அவருடன் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக அமித் ஷாவுடன் பழனிசாமி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், செங்கோட்டையன், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் வெளியேவந்த பிறகு, பழனிசாமி மற்றும் அமித் ஷா மட்டும் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.
அதிமுகவில் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய விவகாரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களைச் சந்திக்க வேண்டாம் என அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையனைப் போன்று பழனிசாமியும் அமித் ஷாவைச் சந்தித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
மறுபுறம், டெல்லியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், முன்னாள் எம்.பி சத்தியபாமா உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் இதுகுறித்து பேசிய சத்தியபாமா, ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.
அதேநேரத்தில், ” ‘தன்மானம்தான் முக்கியம்’ எனப் பேசும் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு சென்று ஆதரவு தேட வேண்டிய அவசியம் என்ன” என அமமுக பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். ”தன்னை டெல்லி சரி செய்துவிடும் என பகல் கனவு காண வேண்டாம். அதிமுகவின் வாக்குகள் குறைந்து, அக்கட்சி தோல்வியடையும்” எனக் குறிப்பிட்ட டி.டி.வி.தினகரன், ”அதிமுக தோற்றால் அதற்கு தான் காரணமல்ல” எனவும் தெரிவித்தார்.