அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. சில நிமிடங்கள் தனியாக நடந்த ஆலோசனை
அதிமுகவில் குழப்பமான சூழல் நிலவும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் அண்மையில் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலரும் அவருடன் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக அமித் ஷாவுடன் பழனிசாமி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் வெளியேவந்த பிறகு, பழனிசாமி மற்றும் அமித் ஷா மட்டும் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.
அதிமுகவில் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவகாரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். செங்கோட்டையனை போன்று பழனிசாமியும் அமித் ஷாவை சந்தித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.