”அதிமுக ஆட்சியில் கோவில் நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச பட்டா” - இபிஎஸ்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் இப்போதே பிரசாரத்தைக் கையில் எடுத்துவுள்ளன. அந்த வகையில், திமுக கூட்டணிக்கு எதிராக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ’மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், கடந்த சில நாட்களாகச் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தின்போது, திமுக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேநேரத்தில், பல வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார். அந்த வகையில், அதிமுக ஆட்சி அமைந்ததும், கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக அரசு, புறம்போக்கு நிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு, பட்டா வழங்குவதற்கான வரன்முறை திட்டத்தை அறிவித்தது. அதில், கோவில் நிலங்களில் வசிப்போருக்கும் பட்டா கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து, பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, 'கோவில் நிலங்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் பெயரில் பட்டா வழங்க மாட்டோம்' என தமிழக அரசு உறுதி அளித்தது. இந்த நிலையில்தான், அதிமுக ஆட்சி அமைந்ததும், கோயில் நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.