
சேலம் மாநகர் மாவட்டம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர், “பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது பொதுச் செயலாளர் முடிவு அல்ல; ஒட்டு மொத்த தொண்டர்களின் முடிவு.
தமிழ்நாட்டிலே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக. 2 கோடி தொண்டர்களின் முடிவின்படியே பாஜகவில் இருந்து அதிமுக விலகி இருக்கிறது. இதன்மூலம் பொதுச் செயலாளர் இதுவரை இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை என்று பலர் கூறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள கட்சிகள், பிரதமர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டா தேர்தலை சந்திக்கின்றனர்? அதிமுக மாநில கட்சி என்ற அடிப்படையில் மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். தேசிய கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்போது, நாம் உடன்படாத விஷயங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.. இனி அந்த நிலை இல்லை.
மாநில மக்களின் நலன்தான் அதிமுகவிற்கு முக்கியம். சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல் கொடுப்பது அதிமுகதான். தேர்தல் நேரத்தில் திமுகவினர் மக்களிடம் அழகாக பேசி ஏமாற்றுவதற்கு அனைத்து தந்திரங்களையும் முன்னெடுப்பார்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு தாங்காது” என்று பேசினார்.