தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்.. இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு!
இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்கிறது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படும்.
செய்தியாளர் - கணபதி சுப்பிரமணியம்
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது.
புதுடெல்லியில் விஞ்ஞான் பவன் வளாகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவருடன் இரண்டு தேர்தல் ஆணையர்களும் இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவற்றின் சட்டமன்றத் தேர்தலை அறிவிக்கவே இந்த செய்தியாளர் சந்திப்பு என தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கலந்துகொள்ளும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில், வாக்குப்பதிவு எத்தனை கட்டங்களாக நடைபெறும், வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி ஆகிய விவரங்கள் வெளியிடப்படும்.
இன்று மாலை 4 மணிக்குத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிமிடம் முதல், சம்பந்தப்பட்ட ஐந்து மாநிலங்களிலும் 'தேர்தல் நடத்தை விதிகள்' (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வரும். இதன் மூலம் அரசு புதிய திட்டங்களை அறிவிக்கவோ அல்லது வாக்காளர்களைக் கவரும் வகையிலான சலுகைகளை வழங்கவோ தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவை.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் ஒரே நாளில் வாக்கு பதிவு நடைபெறும். அதிக தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
கோடைக்காலம் மற்றும் பாதுகாப்புச் சவால்களைக் கருத்தில் கொண்டு விரிவான ஏற்பாடுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

