நீதிமன்றத்தில் ராமதாஸ் - அன்புமணி தரப்பு காரசார வாதம்: பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா?
பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது இந்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதேநேரத்தில் வீதிகளில் போராட்டமாகவும் மாறியுள்ளது.
உச்சம்தொடும் பாமகவின் உட்கட்சி விவகாரம்
பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தனித்தனி தீவாய் மாறி செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. மேலும் இருதரப்பினர் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது. தற்போது இந்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதேநேரத்தில் வீதிகளில் போராட்டமாகவும் மாறியுள்ளது.
பா.ம.க கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாசை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாசை தலைவராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது என அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையில் தங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிதான் தலைவர் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், ராமதாஸ் தரப்பு அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தனர்.
ராமதாஸ் Vs அன்புமணி தரப்பு: நீதிமன்றத்தில் காரசார வாதம்
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “அப்படி எனில் முழுமையான ஆவணங்களை எதையுமே கருத்தில்கொள்ளாமல் தேர்தல் ஆணையம்தான் தவறு செய்துள்ளதாக கூறுகிறீர்கள். அப்படித்தானே” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பில், ”இந்த விவகாரத்தில் முழுமையாக தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளது” என்றனர்.
இதைத் தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்பமணி ராமதாஸ் தரப்பு, ”தேர்தல் ஆணையத்திற்கு முன்னதாகவே நாங்கள் கடிதம் எழுதி இருந்தோம். 2026ஆம் ஆண்டு வரை தன்னுடைய பதவிக்காலம் உள்ளது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும் கட்சியை உரிமை கூறுவது என்றால் அதுதொடர்பாக நீதிமன்றத்துக்குத்தான் செல்ல முடியும்” என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “இது அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், ஒருவேளை தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் வந்தால், வேட்பாளர்களை அங்கீகரித்து இதில் யார் கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும்” எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ”பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு என்று தேர்தலுக்கு முன்பாக பட்டியல் வெளியிடப்படும். தற்போது இந்த இருதரப்பும் பிரச்னைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றில் இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது. மாறாக, கட்சியின் சின்னம் முடக்கி வைக்கப்படும். விசாரணயின் அடிப்படையில் பார்க்கையில், சின்னம் முடக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது” எனத் தெரிவித்தது.
”ராமதாஸ் தரப்பை கேட்காமல் தேர்தல் ஆணையம்..”
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு சியாம் கூறுகையில், “பொதுவாக இதுபோன்ற பிரச்னைகள் சின்ன முடக்கம், இரண்டு தரப்புக்கும் தனித்தனி கட்சி பெயர்கள் மற்றும் வேறு சின்னம் ஒதுக்கீடு என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். அடிப்படையில் சின்னம் என்பது கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல. சின்னம் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தம். தேர்தல் ஆணையம் பயன்பாட்டு உரிமையை வழங்குகிறது. பயன்பாட்டு உரிமையை ஒரு கட்சி பதிவுபெற்ற பிறகு நிபந்தனை அடிப்படையிலோ அல்லது பதிவுக்கு பிறகு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற்றாலோ நிரந்தரமாகவும் ஒதுக்குகிறது. ஆக, பாமவுக்கான சின்னம் என்பது மாம்பழம். ஆனால், அவர்கள் அங்கீகாரத்தை இழந்துவிட்டார்கள்.
இன்றைய நிலைமையில் பாமக என்பது ஒரு பதிவுபெற்ற கட்சி மட்டும்தான். இப்படியான சூழலில் பதிவு பெற்ற கட்சிக்கு இரண்டு தரப்பு உரிமை கொண்டாடுகிறது. இரண்டு தரப்பு வெவ்வேறு ஆவணங்களை வைக்கிறது. ஒரு தரப்பு ஆவணம் போலியானது என்று இன்னொரு தரப்பு சொல்கிறது. இந்தநிலையில், தேர்தல் ஆணையம் இரண்டு தரப்பு ஆவணங்களையும் இரு தரப்பையும் அழைத்து பேச வேண்டும். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எதிர்தரப்பை கேட்காமல் ஒரு முடிவை எடுக்கக் கூடாது. டாக்டர் ராமதாஸ் தரப்பை கேட்காமல் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது. எனவே இது உயர்நீதிமன்ற விசாரணை வரையறைக்குள்தான் வரும். நேரடியாக சிவில் நீதிமன்றத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் பழைய சிவில் நீதிமன்றத்திற்கு போக வேண்டும் என்ற உத்தரவு இதற்கு பொருந்தாது. இப்படியான சூழலில் இதே சூழல் தொடர்ந்தால், சின்ன பயன்பாடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவிடும் என்பது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
உண்மையில் இதில் இரண்டுதரப்பு இருக்கிறது. எந்தப்பக்கம் உண்மை இருக்கிறது என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாது. அப்படியான சூழலில் இரண்டு தரப்பையை அழைத்து பேச வேண்டும், அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கும் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இதற்கு பிரச்னை எண் போட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் தொடக்கம் முதலே தானாக ஒரு முடிவு எடுத்துவிட்டது. தற்போது ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விசாரணைகள் நடைபெறுவது டெல்லி உயர்நீதிமன்றம் என்பதால், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிடக் கோரும் மனு இது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றால் உச்சநீதிமன்றத்திற்கு ராமதாஸ் தரப்பு செல்வார்கள். ” என்றார்.
வழக்கு முடித்து வைப்பு
கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்றும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லியில் ராமதாஸ் தரப்பு போராட்டம்!
அன்புமணி ராமதாசை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீகாந்தி ராமதாஸ், ஜிகே மணி, அருள்மொழி, அருள் ராமதாஸ் மற்றும் எம் துரை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

