தேர்தல் வழக்கு | சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்
செய்தியாளர்: V.M.சுப்பையா
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், அவர் மீது கர்நாடக மாநிலத்தில் உள்ள வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில், கடந்த 19ம் தேதி நேரில் ஆஜராகி, ராபர்ட் புருசுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த சான்றளிக்கப்பட்ட ஆவணங்கள், சான்று ஆவணங்களாக பதிவு செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நயினார் நாகேந்திரன் ஆஜராகியிருந்தார். அவரிடம் ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் குறுக்கு விசாரணை செய்தார்.
ராபர்ட் புரூசுக்கு எதிரான வழக்கு, அவரது சொத்து விவரங்கள் குறித்த ஆவணங்களை பெற்றது குறித்து, ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் கேள்விகளை எழுப்பி, சுமார் ஒருமணி நேரம் குறுக்கு விசாரணை செய்தார். குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கு விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் மீண்டும் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டார்.