எல் நினோ காரணமாக அதிக மழை; முதல்வர் அறிவுறுத்தல் இதுதான்!! - சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!
தென்கிழக்குப் பருவமழை எல் நினோ காரணமாக குறைவான மழையையே கொடுத்திருந்தாலும், வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் அதி கனமழையை கொடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தின இரவு (அக்டோபர் 17) கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, மாகராட்சிப் பணியாளர்கள் தொடர்ந்து தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட நிலையில், பல இடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கின்றன.
இந்தச்சூழலில் தான், தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் இன்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”சென்னையில் அதிக கனமழை பெய்த நேரத்தில் தற்காலிகமாக சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு, பின்னர் காலைக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தோம். எல் நினோ காரணமாக அதிக கனமழை வாய்ப்புள்ளது. எனவே, சுரங்கப்பாதைகள் ஆய்வு செய்து வருகிறோம்.
மழை இன்னும் 90 நாட்கள் உள்ளது; ஒரு நாள் நாங்கள் நன்றாக செய்து விட்டோம் என இருக்க முடியாது. முதலமைச்சர் பாராட்டு வழங்கினாலும், அறிவுரையும் வழங்கினார். அதாவது, ஒரு முறை தண்ணீர் வடிந்து விட்டது என அதனை வெற்றியாக பார்க்க முடியாது, அதில் இருந்து பாடங்களை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, பணி ஆற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், மழை காரணமாக சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும்; நீர் நிலைகளில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. எனவே, இன்னும் அதிக அளவிலான தண்ணீர் தேவை உள்ளது; எனவே மழை வேண்டும் என்றுதான் நாம் வேண்ட வேண்டும். விவசாயிகளுக்கு மழை தேவை.
சென்னை மாநகராட்சி பொறுத்தவரை உட்கட்டமைப்புகளை 2011 ஆம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த உட்கட்டமைப்புகள் படிப்படியாக மேற்கொண்டு வருவதால் 700 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், இந்த ஆண்டு 219 ஆக உள்ளது. இந்த மழைக்காலம் முடியும் நேரத்தில் இதைவிட குறைய வேண்டும். ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்த மாநகராட்சி பணிகள் கண்டிப்பாக உதவுகிறது, ஆனால் இதோடு முடிவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

