உற்பத்தி குறைவால் ஒரு முட்டையின் விலை ரூ.4.74 காசுகள் அதிகரித்துள்ளது.
முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 59 காசுகளில் இருந்து 15 காசுகள் உயர்த்தி 4 ரூபாய் 74 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை கோழிப்பண்ணை வரலாற்றில் இல்லாத அதிக பட்ச விலையாகும். கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 35 காசுகளாக இருந்த நிலையில் கடந்த 6-ம் தேதி 4 ரூபாய் 41 காசுகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது வட மாநிலங்களில் குளிர் துவங்கியுள்ள நிலையில் அங்கும் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடையில் வறட்சியின் போது அதிகளவு கோழிகள் விற்கப்பட்டதால் கோழிகளின் எண்ணிக்கை குறைந்து, தினசரி முட்டை உற்பத்தியும் குறைந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். தினசரி 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டு கோடியே 75 லட்சம் முட்டைகள் வரையே உற்பத்தி செய்யப்படுவதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முட்டை விலை மேலும் உயரக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.