vijay seeman rejects on eps calls for alliance
சீமான், இபிஎஸ், விஜய்எக்ஸ் தளம்

விஜய்க்கு எப்போது அழைப்பு விடுத்தேன்? புது கணக்கை சொல்லும் இபிஎஸ்! அன்றும் இன்றும் பேசியதென்ன?

விஜய்க்கு எப்போது அழைப்பு விடுத்தேன்.. புது கணக்கை சொல்லும் பழனிசாமி.. அன்றும் இன்றும்.. என்னதான் நடக்கிறது?
Published on

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்த நேரத்தில், அரசியல் களத்தில் தனித்தே நிற்கும் சீமானுக்கும், புது வரவான விஜய்க்கும் அவர் விடுத்த மறைமுக அழைப்பு குறித்து மாறுபட்ட கருத்தை கூறி இருக்கிறார். அதோடு, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கெல்லாம் சாத்தியமே இல்லை என்றவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். இதன்மூலம், தனது கணக்கை மாற்றிவிட்டாரா.. என்ன வியூகம் வைத்திருக்கிறார் என்பதை அலசலாம்.

எடப்பாடி முன் வரிசை கட்டும் கேள்விகள்..

கூட்டணிக்குஅழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
கூட்டணிக்குஅழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமிமுகநூல்

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கும் நிலையில், மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கி இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரிடம் ஏகப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்களது பிரச்சார உத்தி என்ன? தேர்தல் வாக்குறுதி என்ன என்ற கேள்விகளைத் தாண்டி, பாஜக அதிமுக கூட்டணி குறித்தே கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன. வெற்றிபெற்றால் அமையப்போவது அதிமுக ஆட்சியா அல்லது எண்டிஏ கூட்டணி ஆட்சியா என்ற கேள்வியில் துவங்கி கூட்டணிக்குள் விஜய் வருகிறாரா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

“பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது”

இப்படியான சூழலில், புதியதலைமுறை நேர்காணலில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பல்வேறு விடயங்களை மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டீர்களே, கூட்டணி ஆட்சி என்று வந்தால் அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று விமர்சிக்கிறார்களே எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, தமிழகத்தை திமுக, அதிமுகதான் ஆளும்.. பாஜகவால் ஆட்சிக்கு வர முடியாது..

இபிஎஸ்
இபிஎஸ்pt

அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று பதிலளிக்கிறார்.. அதோடு, நடக்கப்போவது சட்டமன்ற தேர்தல், ஆதலால் அதிமுக பாஜக கூட்டணி என்பது உடைய வாய்ப்பே இல்லை என்றவர், தமிழ்நாட்டு மக்கள் ஒருகட்சி ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள்.. கூட்டணியை அமைத்துவிட்டாலும் ஆட்சி அமைக்கப்போவது அதிமுகதான் என்று உறுதியாக பதிலளித்தார்.

விஜய்யோடு கூட்டணியா?

மேலும், விஜய் மற்றும் சீமானுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தீர்களே என்ற கேள்விக்கு, திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ஒத்த கருத்துள்ள கட்சிகளைத்தான் கூட்டணிக்கு அழைத்தோம். மற்றபடி கூட்டணி பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தவில்லை. விஜய் உள்ளிட்டோரோடு கூட்டணி பேச்சுவார்த்தை என்ற யூகத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று பதிலளித்தார். அதே நேரம், பொறுத்திருந்து பாருங்கள், 8 மாதத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் சூசகம் தெரிவித்தார்.

விஜய்
விஜய்புதிய தலைமுறை

விஜய் இளைஞர்களின் வாக்குகளை வாங்குவாரா என்ற கேள்வி எழுப்பியபோது, யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றவர், விஜய்யையும், சீமானையும் கூட்டணிக்கு இதுவரை நேரடியாக நான் அழைக்கவே இல்லையே.. கூட்டணி குறித்து அந்தந்த கட்சித் தலைவர்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று ஒரே போடாக போட்டு முடித்தார்.

சீமான்.. விஜய்க்கு அழைப்பு.. அன்றும் இன்றும்

முன்னதாக, தனியார் தொலைக்காட்சிக்கும், ஆங்கில நாளிதழுக்கும் பேட்டியளித்திருந்த பழனிசாமி, விஜய் மற்றும் சீமான் குறித்த கேள்விக்கு, ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்புவிடுத்தார். காலம் இருக்கிறது.. எல்லாம் நல்லபடியே நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், ஒரு தீய சக்தியை வைத்து இன்னொரு தீய சக்தியை ஒழிக்க முடியாதென, அதிமுக அழைப்புக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார் சீமான். அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையில் வென்று தவெக புது வரலாறு படைக்கும் என்று பதிலளித்தது தவெக. இப்படியாக, அழைப்புகளுக்கு பதில் வந்து சேர்ந்த நிலையில், நான் எப்போது இருவரையும் நேரடியாக அழைத்தேன் என்று கேட்டிருக்கிறார் பழனிசாமி.

சீமான்
சீமான் சீமான்

எனினும், வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள், இந்தியா கூட்டணி என்ற கூட்டணியை உருவாக்கும்போது, அதே போன்ற ஒரு சூழல் 2026ல் உருவாகலாம் என்று பேசியவர், தேர்தலுக்கு முன் நல்ல நிலை உருவாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தம், 2026 தேர்தல் நெருக்கத்தில், பாஜக கூட்டணியை கழட்டிவிட்டுவிட்டு, விஜய் உள்ளிட்டோருடன் பழனிசாமி கூட்டணி அமைத்துவிடுவார் என்ற கேள்விகளுக்கெல்லாம், அது நடக்க வாய்ப்பே இல்லை என்ற ரீதியில் பதிலளித்து முடித்திருக்கிறார். ஆக மொத்தம், 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு குதிரைகளை மையப்படுத்திய, நான்கு முனைப்போட்டி என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com