“CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது” - இபிஎஸ்

“CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

“இன்னும் 7 நாட்களுக்குள் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்” என்று மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது கடும் எதிர்ப்பினை மீண்டுமொருமுறை பதிவுசெய்திருந்தார்.

CAA
CAAPUTHIYA THALAIMURAI

அவர் தெரிவித்திருந்ததாவது, “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் CAA நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA கால்வைக்க விடமாட்டோம்!” என தெரிவித்திருந்தார்.

இந்த பதிவில் அதிமுகவை விமர்சித்தும் முதல்வர் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், “இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான #CAB சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களித்ததுதான். மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ.க. அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் சிஏஏ தொடர்பாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், “CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

இது தொடர்பாக CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம். ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.

சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com