“மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணம்”-திமுக மீது இபிஎஸ் விமர்சனம் #ElectoralBonds

“மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
eps, mk stalin
eps, mk stalinpt web

கட்சிகள், தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலமாக பெற்ற தொகை குறித்தான தகவல்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதேபோல் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுத்த நிதி தொடர்பான விவரங்களையும் வெளியிட்டது.

தேர்தல் பத்திரம் - உச்சநீதிமன்றம்
தேர்தல் பத்திரம் - உச்சநீதிமன்றம்புதிய தலைமுறை

இதில் கட்சிகள் சார்பில் அதிகபட்சமாக பாஜக ரூ. 6060 கோடி ரூபாய் நிதி பெற்றிருந்தது. இது 2019 - 24 வரையிலான தொகை மட்டுமே. 2018-19 காலத்தில் பெற்றதையும் சேர்த்தால், ரூ.6986.5 கோடி ஆகும்.

அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்சமாக நிதி வழங்கிய நிறுவனமாக லாட்டரி மன்னன் மார்டினின் நிறுவனமான Future Gaming and Hotel Services Private Limited சுமார் ரூ.1368 கோடியை நிதியாக அளித்திருந்தது.

தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் என்பது 2018 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், எஸ்பிஐ வழங்கி, தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்த பட்டியலில் 2019 ஏப்ரல் 12 ஆம் தேதியில் இருந்துதான் தகவல்கள் இருந்தன.

ஏப்ரல் 12 2019 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்திற்கான தகவல்களை, தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் இன்று சமர்பித்தது. இத்தகவல்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகவல்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.

DMK | #Congress | #ElectionCommission
DMK | #Congress | #ElectionCommission

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ரூ.509 கோடி ரூபாயை லாட்டரி மன்னன் சந்தியாகு மார்ட்டினின் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது இதன்மூலம் தெரியவந்துள்ளது.திமுக மொத்தமாக பெற்ற தொகையே ரூ.656.5 கோடி ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தியாகு மார்ட்டின் மொத்தமாக வழங்கிய ரூ.1368 கோடி ரூபாயில் திமுக 37% பணத்தை பெற்றுள்ளது என்பது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தெரியவந்துள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து திமுக நிதி பெற்றதை விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.

சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.

ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது.

மக்களின் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com