"ஒரு கணவராக எனக்காக.." - ‘அவரும் நானும் பாகம் 2’ நூல் வெளியீட்டு விழாவில் துர்கா ஸ்டாலின் பேச்சு!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் துர்கா ஸ்டாலின் எழுதிய 'அவரும் நானும்' (இரண்டாம் பாகம்) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்புரையாற்றினார். நூலினை வெளியிடும் உயிர்மை பதிப்பகம் சார்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் பதிப்பாளர் உரை நிகழ்த்த, பத்திரிகையாளர் லோகநாயகி நூல் அறிமுக உரையாற்றினார்.
பிரபல எழுத்தாளர் சிவசங்கரி நூலினை வெளியிட டாபே குழுமத்தின் தலைவர்-நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் முதல் பிரதியினைப் பெற்றார். மேனாள் நீதியரசரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மேல் முறையீட்டு ஆணையத் தலைவருமான பவானி சுப்பராயன், கோவை சந்திராஜி.ஆர்.ஜி. நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் நூலின் ஆசிரியர் துர்கா ஸ்டாலின் ஏற்புரை வழங்கினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சராக, கட்சித் தலைவராக அவருக்கு பல்வேறு பணிகள் இருந்தாலும், ஒரு கணவராக எனக்காக நேரம் ஒதுக்கி, இந்த நூலை முழுமையாக படித்து, எனக்கு ஆலோசனைகள் வழங்கினார் அவர். மேலும் இந்நூலுக்கு அன்பு உரையும் அவரே எழுதிக் கொடுத்தார்; அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி
இந்த விழாவிற்கு அவரால் வரமுடியாவிட்டாலும், அவரது மனம் முழுக்க இங்குதான் இருக்கும். நேரலையில் முழு நிகழ்ச்சியையும் கண்டுகொண்டிருக்கும் என் கணவருக்கு மீண்டும் நன்றி. ‘கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு சென்று நல்லபடியாக நடத்திவிட்டு வா’ என்று வாழ்த்திய அனுப்பியது அவர்தான்” எனத் தெரிவித்தார். மேலும், “பல்வேறு பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இந்த நிகழ்ச்சிக்கு வந்த துணை முதலமைச்சருக்கு என் நன்றி” என சொன்னவுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரங்கத்தில் இருந்தோர் கலகலப்பாகினர்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கலைமாமணி ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.