”அதை நீரூபித்தால் இனி படமே பண்ணமாட்டேன்!” அபயங்கர் விவகாரத்தில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஓபன் டாக்!
கைதி திரைப்படத்தில் டில்லியும் அவருடைய மகள் அமுதாவும் சந்தித்து கொள்ளும் கடைசி காட்சி, ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு மறக்க முடியாத எமோஷனல் காட்சியாக பதிவாகியிருக்கும். அதிலும் ‘நீ தான் என் அப்பாவா, பேரென்ன, ஏன் என்ன பார்க்க வரல, அப்பா” என அமுதா கேட்கும்போது டில்லி உடைந்து அழுவார். அந்த காட்சி ஆரம்பிக்கும்போது புல்லாங்குழலை கொண்டு ஒரு பிஜிஎம் ஒலிக்கும், டில்லி அதுவரை போராடிய ஒரு போராட்டம் இதற்குதானே என ரசிகர்கள் உணரும்போது, தந்தை-மகள் உடைந்து அழும் பாசம் நம்மை மேலும் காட்சியோடு கட்டிப்போடும். அந்த பின்னணி இசை காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கும்.
அப்படியே படத்தின் ஆரம்பத்திற்கு போனால் பிரியாணி சாப்பிடும்போது ஜெயில் கம்பிகளை தட்டியது போல ஒலிக்கும் பிஜிஎம், கைதி என்ற முழுபடத்தின் டோன் எப்படி பட்டது என்பதை நமக்கு சொல்லும். படத்தை தாண்டி படம் முழுவதும் வெரைட்டிகளை கொட்டியிருக்கும் பேக்ரவுண்ட் ஸ்கோரும் ரசிகர்கள் கைதி 2-ஐ எதிர்ப்பார்க்க ஒரு காரணம் சென்று சொன்னால் பொய்யாகாது.
இதுஒருபுறம் இருக்க விக்ரம் வேதா படத்தில் வேதா நடந்துவரும்போது ‘தர ரர ரர ரா’ ஒரு பின்னணி இசை ஒலிக்கும், தற்போதுவரை ஒரு சிறந்த இண்ட்ரோ சீனுக்கும், அதற்கு சரியான பிஜிஎம் இசைக்கும் அந்த காட்சியைத்தான் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.
இப்படி, ”கைதி, விக்ரம் வேதா, பிளாக், டிமாண்டி காலனி 2, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், அடங்க மறு, லக்ஷ்மி” போன்ற படங்களின் BGM-களாலும், பாடல்களாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். இதுபோக புஷ்பா 2 திரைப்படத்திற்கான பின்னணி இசையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் தன்னை நிரூபித்துக்காட்டினாலும், பெரிய படங்களுக்கான வாய்ப்புகள் சாம் சிஎஸ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிடைப்பதில்லை என்ற ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதை அவரே ஒருமுறை வெளிப்படுத்தியும் உள்ளார்.
சாய் அபயங்கருக்கு குவிந்த வாய்ப்புகள்.. எழுந்த விமர்சனம்!
சாம் சிஎஸ், ஷான் ரோல்டன் போன்ற இசையமைப்பாளர்கள் பெரிய படங்களுக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கும் போது, கட்சி சேர மற்றும் ஆச கூட என்ற 2 ஆல்பம் பாடல்களை மட்டுமே இசையமைத்திருக்கும் சாய் அபயங்கருக்கு சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜுன் போன்ற பெரிய ஹீரோக்களின் 7 படங்கள் வரிசையாக சைன் செய்யப்பட்டுள்ளது.
இதை கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள் “புது படத்திற்கான அப்டேட் வந்தா யாரு ஹீரோ, யாரு டைரக்டர்னு தான எல்லாருக்கும் நினைக்கதோணும் எனக்கு மட்டும் மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கரா இருப்பாரோனு தோணுது” என மீம் போட்டு கலாய்க்கும் நிலைக்கும் விமர்சனங்கள் சென்றன. மேலும் சிபாரிசு, நெப்போட்டிசம் என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை ரசிகர்கள் முன்வைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சாய் அபயங்கர், ”எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எந்தவிதமான செல்வாக்கும் இல்லை. என்னுடைய முதல் பட வாய்ப்பு கட்சி சேர பாடலை பார்த்துதான் கிடைத்தது. ஆடியன்ஸே இவ்வளவு யோசிக்கும் போது படத்தை இயக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் யோசிக்க மாட்டார்களா” என பேசியிருந்தார்.
படமே பண்ணமாட்டேன்.. சாம் சிஎஸ் ஓபன் டாக்!
சாய் அபயங்கர் விவகாரம் பேசுபொருளாக மாறிய நிலையில், பல ரசிகர்கள் சாம் சிஎஸ்-க்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்தும் நிறைய பதிவுகளையும், மீம்களையும் பதிவிட்டிருந்தனர்.
இந்த சூழலில் இதுகுறித்து சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், “சமீபத்தில் ஒருத்தருக்கு மட்டும் நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது, உங்களுக்கு மட்டும் ஏன் கிடைக்கலனு நிறைய மீம் வருது. அதுலையும் என் ஃபோட்டோ போட்டு கைதி படத்துல அப்பா பிஜிஎம் ஒன்னு இருக்கும் அதையும் போட்டு, இவ்வளவு திறமை இருக்க இவருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கலனு பதிவுகளை பார்த்தேன்.
ஒரு பெரிய தயாரிப்பாளர் கூட எனக்கு ஃபோன் போட்டு என்ன சாம் எதும் பிஆர் பன்றீங்களானு கேட்டாரு. நான் ரிலீஸ் ஆகுற என் படத்துக்கே பிஆர் பண்ணமாட்டன்.
ஓப்பனா சொல்றன் சாய் அபயங்கர் தான, அவருக்கு படங்கள் கிடைக்குறதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. அவர் அடிப்படையா நல்ல மியூசியன், நல்லா வொர்க் பண்றாரு. அவர்கிட்ட நிறைய பாடல்கள் இருக்கு, நல்ல திறமையான ஆளு. ஆனால் அவருக்கு கிடைக்குற வாய்ப்பு எனக்கு ஏன் கிடைக்கலனு வரும்போது, நான் அதைப்பற்றி எதையும் நினைப்பதே இல்லை.
ஆனால் நான் எனக்காக வேண்டுமென்றே பிஆர் பன்றனு சினிமாவில் ஒருத்தர் சொல்லிட்டாங்கனா, அதற்கு பிறகு நான் படமே பண்ண மாட்டன். இதை நான் ஏன் சொல்றன்னா, இது என்னுடைய வேலையே கிடையாது. எனக்கான வாய்ப்புகள் கிடைக்குது, நான் அதுல திருப்தியா இருக்கன்.
நான் ஜீரோவில் இருந்து கூட வரல, மைனஸ்ல இருந்து வந்திருக்கன். எனக்கு கிடைத்திருக்கும் அனைத்துமே மிகப்பெரிய மேடையாக தான் பார்க்கிறேன். நான் எனக்காக பிஆர் செய்தால் அது ஒரு கட்டத்தில் பொய்யாகிவிடும். எனக்காக பதிவு போடும் அனைத்து ரசிகர்களும் அவர்களுடைய மனதிலிருந்து தான் போடுகிறார்கள், பணத்தை வாங்கிட்டு ஒருத்தரும் இப்படி போட மாட்டாங்க.
ஏன் இவருக்கு கிடைக்கல என பதிவிடும் ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன், யாரென்றே தெரியாதவர்கள் எனக்காக பேசும்போது அது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இவருக்கு திறமை இருக்கு ஏன் பெரிய படங்கள் கிடைக்கல என ரசிகர்கள் கேட்கும்போது, எனக்கு அந்த படங்கள் கிடைத்தது போல மகிழ்ச்சி ஏற்படுகிறது.
சாய் அபயங்கர் திறமையான பையன், அவருக்கு நிறைய படங்கள் கிடைக்க வேண்டும், அதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தான்” என்று சாம் சிஎஸ் பேசியுள்ளார்.