
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 36 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு மைதானம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, அமைச்சர் செஞ்சி மஸ்தான், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
ஆய்வின்போது விளையாட்டு அரங்கு மற்றும் மைதானத்தின் கட்டமைப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், “காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டும் என கேட்டுள்ளோம். நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் இருந்து நீர் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல விளையாட்டு வீரர்களுக்கு இதே மைதானத்தில் நிரந்தரமான தங்கும் விடுதி கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். தற்போது உள்ள ஆட்கள் போதாது என்பதால் கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும் என கேட்டுள்ளோம். வேலூர் விளையாட்டு மைதானத்தை தமிழகத்தில் உள்ள One of the Best விளையாட்டு மைதானமாக மாற்றிக் காட்டுவேன்” என்றார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலையிலிருந்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது குறித்து பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், “எனக்கு தெரியாது” என முதலில் பதில் அளித்தார்.
தொடர்ச்சியாக இரண்டு அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது குறித்து மீண்டும் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே" என்ற பாடலை பாடி பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் ‘அமைச்சர் பொன்முடி வீட்டில் நடக்கும் ரெய்டு, பழி வாங்கும் நடவடிக்கையா’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பின்ன என்ன... எல்லாமே அரசியல் தாங்க” என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.