\
Drug Awareness Marathon TN CM Vijay Participate
cm vijayPT Web

போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் | மக்களுடன் மக்களாய் ஓடிய முதல்வர் விஜய்!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
Published on

போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக தவெக அரசு மீது எதிர்க்கட்சிகள் சில குற்றச்சாட்டுகளை எழுப்பி விவாதித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, மாநிலத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்பதற்கும், இளைஞர்களைப் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க மாவட்டந்தோறும் சிறப்புப் படைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (ஜூன் 26), சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்' என்ற தலைப்பில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் முதல்வர் விஜயுடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். முன்னதாக, நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில், விழிப்புணர்வு வாசகம் எழுதி கையொப்பமிட்டார். தொடர்ந்து, போதை விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்ததுடன் அதை ஏற்றுக் கொண்டார். ”நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன்; போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான நடவடிக்கையின் மூலம் போதைப்பொருளை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்; மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com