தமிழ்நாடு | 20 லட்சம் தெருநாய்கள்; 3.80 லட்சம் பேர் பாதிப்பு... பொது சுகாதாரத் துறை தகவல்!
உச்ச நீதிமன்றமே தலையிட்டு, ஏன் என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு, தீவிரமான விவகாரமாக மாறியிருக்கிறது நாய்க்கடி பிரச்சினை. தேசிய அளவிலான இந்தப் பிரச்சினையில், தமிழ்நாட்டின் நிலை என்னவென்று, தமிழக பொது சுகாதாரத் துறையே ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை, தமிழ்நாடு முழுவதும் 3.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை.
கிராமங்களில் அதிகமாகும் நாய்க்கடி பிரச்சனை!
இதில் எட்டாயிரத்துக்கும் அதிகமானோர், தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக் காட்டுகிறது பொது சுகாதாரத் துறை. இதுமட்டுமல்ல, நாய்க்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் பாதிப்பில் 22 பேர் உயிரிழந்து விட்டதாக குறிப்பிட்டு, அதிர்ச்சியை பேரதிர்ச்சியாக்குகிறது அந்த அறிக்கை. தமிழ்நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே, தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதன் காரணமாக, நகரப் பகுதிகளை விட, கிராமங்களில் தான், நாய்க்கடி பாதிப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.
நாய்க்கடி பாதிப்பை தடுக்க என்ன செய்யலாம்
நாய்க்கடி பாதிப்பைத் தடுக்க என்ன செய்யலாம் என்று, தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சில யோசனைகளை முன்வைத்துள்ளனர். நாய் கடித்த காயங்களை கிருமிநாசினியை வைத்து முறையாக சுத்தம் செய்யாவிட்டால், தொற்று ஏற்படும். தடுப்பூசி போடாமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் தடுப்பூசி போட தவறினாலோ ரேபிஸ் பரவுவதை தடுக்க முடியாது. நாய், பூனை, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், காயத்தின் அளவு மற்றும் ஆழத்தைக் கொண்டு மதிப்பிட்டு, வகைப்படுத்தி, சிகிச்சை அளிக்க வேண்டும்.
நம் சருமத்தின் மீது விலங்குகளின் நாக்கு படுவதால் ரேபிஸ் பரவாது. இது வகை ஒன்று. கடிக்கும்போது சிராய்ப்பு அல்லது காயங்கள் ஏற்பட்டால், அது, வகை இரண்டு. இதற்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டே ஆக வேண்டும். காயங்கள் ஆழமாக இருந்தால் தடுப்பூசி மட்டும் போதாது. ஆர்.ஐ.ஜி. எனப்படும் ரேபிஸ் இன்யூனோ குளோபளின் தடுப்பு மருந்தும் கட்டாயம். முதல் நாளில் தொடங்கி, 3, 7, 21 ஆம் நாள் என, 4 தவணைகளாக ரேபிஸ் தடுப்பூசி கட்டாயம். இன்யூனோ குளோபளின் மருந்து, முதல் நாள் செலுத்தும் தடுப்பூசியுடன் சேர்ந்து செலுத்தப்பட வேண்டும். கால தாமதம் ஆனாலோ, அதை மட்டும் தனியாக செலுத்தினாலோ எந்த பலனும் இல்லை. நாய் கடித்து விட்டால். இந்த வழிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால், ரேபிஸ் நோய் பாதித்தே தீரும், தடுக்க முடியாது.