மலையேற்றத்திற்கு சென்ற மருத்துவர்.. இறுதியில் நேர்ந்த சோக சம்பவம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஜ்சல் செயின். வயது 26. இவர் மருத்துவம் படித்திருக்கிறார். இந்தநிலையில் தனது நண்பர் பாகிலுடன் மலையேற்றம் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளார்.
இதற்காக இருவரும், தமிழ்நாடு மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் முறையான அனுமதி பெற்று மலையேற்றம் செல்ல தயாராகினர். இந்நிலையில் நேற்றைய தினம் மலையேற்றத்துக்காக டாப்சிலிப்புக்கு தனது நண்பர் பாகிலுடன் வந்தார் அஜ்சல்.
இவர்களுடன் வழிகாட்டிகள் சந்தான பிரகாஷ், அஜித்குமார் , வனத்துறையினரும் மலையேற்றத்தை மேற்கொண்டனர். இந்தநிலையில், மாலை 4.30 மணியளவில் மலையேற்றம் முடித்து மலை அடிவாரத்துக்கு திரும்பியதக கூறப்படுகிறது. அப்போது, நீரழப்பு காரணமாக மயக்கமடைந்துள்ளர் அஜ்சல். பாகிலும் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இருவரும் உடனடியாக வேட்டைக்காரன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அஜ்சலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வனத்துறையினர் அஜ்சலின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, ஆனைமலை போலீஸில் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில், பலியான அஜ்சல் சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அஜ்சலின் உடற்கூராய்வு திங்கள்கிழமை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது.. மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.