தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை குப்பை தொட்டிகளில் மக்கள் வீச வேண்டாம் என சென்னை பெருநகர மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனவரி 1, 2019 முதல் 14 பிளாஸ்டிக் பொருட்கள் எனப்படும் நெகிழிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முடக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் முதல் சிறை வரை தண்டனைகள் வழங்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பிளாஸ்டிக் தடைக்கு பின்னர் இருக்கும் நிலைகுறித்து, புதிய தலைமுறை இணையதளம் ஆய்வு மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவலின்படி, கடந்த 1ஆம் தேதி பிளாஸ்டிக் தடை வந்த அன்று, பெரிதளவில் எந்த மாற்றமும் இல்லை. மக்கள் வழக்கம்போல், நெகிழிப் பைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தினர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாளர்கள் கடைகளை போராட்டம் மற்றும் தடை காரணமாக மூடியுள்ளனர்.
இதனால் உணவகங்கள் பார்சல் கட்ட நெகிழிகள் இன்றி, பார்சல்களை குறைத்தன. வாழை இழையில் பார்சல் கட்டி துணிப்பைகளில் கொடுத்தனர். அதற்காக கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை அனைத்து உணவகங்களும் விலையை ஏற்றியுள்ளனர். இருந்தபோதிலும், விலையேற்றத்தை ஏற்க மறுக்கும் மக்கள், பிளாஸ்டிக் கவரை கொடுங்கள் என்று கேட்பதாக சில உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், அடித்தட்டு மக்கள் வரை பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பதுதான்.
அதேசமயம் உணவக உரிமையாளர்கள், பழம் விற்கும் வியாபாரிகள், பூக்கடை உரிமையாளர்கள், மளிகை கடையாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள் என அனைவரது கேள்வியாகவும் இருப்பது, “ஏன் கவர்களில் வரும் பிளாஸ்டி உணவுகளை தடை செய்ய வேண்டியது தானே. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அந்த மேல்நாட்டு மற்றும் மசாலா உணவுகளால் பாதிப்புகள் தான் என அனைவருமே கூறுகின்றனர். ஆனால் அதை தடை செய்யவில்லை.
அப்படியென்றால் நாங்களும் அத்தியாவசிய பொருட்களான உணவு, பழங்கள் உள்ளிட்டவற்றை தானே கவர்களில் கொடுக்கிறோம் எங்களுக்கு மட்டும் தடையா. இது எங்கள் வியாபாரத்தை முடக்கும் செயல்தான். நாங்கள் உணவுப்பொருட்களை கவர்களில் வழங்கினால், அதற்கு தடை என்கிறார்கள். ஊப்பர் மற்றும் சுவிக்கி போன்ற நிறுவனங்கள் வழங்கினால், அது உணவுப்பொருள் அதற்கு தடையில்லை என்கிறார்கள். என்ன நியாயம் இது? மொத்தத்தில் சிறு, குறு வியாபாரிகளை முடக்கி, பெரும் முதலாளிகளை லாபம் அடையச் செய்ய இதனை அரசு செய்துள்ளது” என புலம்புகின்றனர்.
மக்கள் சிலரிடம் கேட்டபோது, “பிளாஸ்டிக் தடை நல்லது தான். நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதற்கு மாற்று வழியை அரசு முறையாக செய்திருக்க வேண்டுமல்லவா? முன்பெல்லாம், ரூ.2, ரூ.3க்கு விற்கப்பட்ட துணி மற்றும் மக்கும் பைகள் தற்போது ரூ.10, ரூ.20க்கு விற்கப்படுகிறது. உணவகங்களும் விலையை ரூ.10, ரூ.15 உயர்த்திவிட்டனர். அரசு எப்போது, எந்த திட்டத்தை கொண்டுவந்தாலும் அது இறுதியில் அடியாக விழுவது மக்கள் தலையில் தான். நாளடைவில் நாங்கள் பைகளுக்கு மாறிவிடுவோம் தான்.
ஆனால் பிளாஸ்டிக் முழுவதும் நிறுத்தப்படுமா? இந்த 14 பொருட்கள் தான் அதிக பயன்பாடு என்கின்றனர். அப்படியென்றால், அதனை மறுபயன்பாடு செய்யும் வழியை அரசு கண்டுபிடிக்கலாமே. அல்லது மலிவு விலைக்கு புதிய பைகளை வழங்கலாமே? என்ன இருந்தாலும், முறையான முன் ஏற்பாடுகள் செய்யாத காரணத்தினால் இது சற்று அதிருப்தி அளிக்கும் நடவடிக்கையாகவே இருக்கிறது” என்கின்றனர்.
சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “நிறுவனங்கள் பெரும்பாலும் மாறிவிட்டன. ஆனால் மக்கள் மாறுவதற்கு சிரமப் படுகின்றனர். அவர்கள் படிப்படியாக மாறிவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே மக்கள் வீட்டில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக குப்பைகளில் வீசிச் செல்கின்றனர். அதனை துப்புரவு பணியாளர்கள் பிரித்தெடுக்க சிரமமாக உள்ளது. எனவே மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.
தடைக்குப் பிறகு நாள் ஒன்றுக்கு சுமார் 9 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்படுகின்றன. அவற்றை சாலை அமைக்கும் மூட்டைகள் செய்யவதற்கும், சிமெண்ட் ஆலைகளுக்கு இணை தயாரிப்பு செய்யவும் அனுப்புகிறோம். யாரேனும் மக்களிடம் பிளாஸ்டிக் பொருளில் பார்சல் கொடுத்தால் அதனை மக்கள் வாங்க மறுக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை என்பது உண்மையில் நன்மை பயக்கும்” என்றார்.
குறைகள் பல கண்டாலும், மாற்றம் என்பது ஒன்றிலிருந்து தான் தொடங்க வேண்டும். மாநிலமே மாறும்போது மக்களும் மாறுவதில் குறையில்லை. மக்கள் ஒத்துழைப்பு இன்றி அரசின் எந்த திட்டமும் சாத்தியமில்லை. கூடுதல் விலை என சிரமப்படும் மக்கள் ஒரு முறை துணிப்பைகள் வாங்கினால் அது மாத கணக்கில் பயன்படும் என்பதையும் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். குப்பைகளில் விழும் நெகிழிப்பைகளை உண்ணும் மாடுகள், ஆடுகள் உயிரிழக்கும் சம்பவங்கள் குறையும்.
கடலிற்கு செல்லும் பிளாஸ்டிக் பைகளை உண்டு மரணிக்கும் மீன், ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பிழைக்கும். கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மக்கள் நெகிழி இல்லாத வாழ்வையே வாழ்ந்தனர் என்பதையும் சிந்திக்க வேண்டும். நெகிழிகளை தடுக்கும் ஒரு புரட்சியின் தொடக்கமாகவே இதுபோன்ற நடவடிக்கைகளை தொடங்குவோம். பெரு நிறுவனங்களின் சிப்ஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட எந்த நெகிழிகளாக இருந்தாலும் அதை பயன்படுத்துவது மக்கள் தான் என்பதால் மக்கள் மாறினால் அனைத்து மாறும். இதுவே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.