“மத்திய அரசு கூடுதல் நிதி கொடுத்ததா? யார் சொன்னது இதாங்க உண்மை”-விவரங்களை அடுக்கிய திமுகவின் சூர்யா!

“100 ரூபாய்க்கு 26 ரூபாய் திருப்பிக் கொடுத்தோம் என்பது திமுகவின் கணக்கு இல்லை. ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கொடுத்த கணக்கு” சூர்யா கிருஷ்ணமூர்த்தி
சூர்யா கிருஷ்ணமூர்த்தி
சூர்யா கிருஷ்ணமூர்த்திpt web

மத்திய அரசு நிதிப்பகிர்வு விவகாரத்தில் குறைவான நிதியையே பகிர்ந்தளிப்பதாக தமிழ்நாடு நீண்டகாலமாக குற்றம்சாட்டி வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அண்டை மாநிலங்களும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன. தென் மாநிலங்களின் பொருளாதார கூட்டமைப்பை உருவாக்க முயலுவதாகவும் கர்நாடக மாநிலம் தெரிவித்திருந்தது.

மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அவர்களுடைய குமுறலாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அரசும், தெலங்கானா மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசும், கேரளாவில் இடதுசாரியும் ஆட்சியில் உள்ளன. இவையனைத்தும் பாஜகவைச் சார்ந்து இல்லாத ஆட்சியிலிருக்கும் மாநிலங்கள் ஆகும். அதுபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனினும் இதுவும் நிதிப் பிரச்னையில் பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனாலும், இந்த விஷயத்தில் தென் மாநிலங்கள்தான் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.

நிதி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறி தென்மாநில கட்சிகள் டெல்லியில் போராட்டமும் நடத்தியது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த போராட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். ஆனால், ஆளும் பாஜக தரப்பினரோ கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட அதிகமான நிதி மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவந்த வேளையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “வடக்கு தெற்கு என்று நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதை நிறுத்துங்கள்” எனவும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடிபுதிய தலைமுறை

தமிழகத்தில் திமுகவினர் தாங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் எல்லாம், நிதிப்பகிர்வில் மத்திய அரசு தெற்கை வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசியவை, “பாஜகவினர் தொடர்ந்து இரு செய்திகளை சொல்லி வருகிறார்கள். ஒன்று மாநில அரசின் திட்டங்களை ஒன்றிய அரசின் திட்டங்களாக லேபிள் ஒட்டுவது, இன்னொன்று நாங்கள் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக நிதி கொடுக்கின்றோம் என்பது. இந்த இரு செய்திகளையும் அவர்கள் பரப்பி வருகிறார்கள். தமிழக அரசின் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்த இரு பொய்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

நிதிப் பகிர்வினைப் பொறுத்தவரை இருவகைகளில் ஒன்றிய அரசின் நிதி மாநிலத்திற்கு வருகிறது. ஒன்றிய அரசின் வரிவருவாயை மாநிலத்திற்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் சுருக்கமாக வரிப்பகிர்வு, மற்றொன்று பல்வேறு திட்டங்களில் இருக்கக்கூடிய மானியங்கள். இதில் மானியங்களின் மூலம் ஒன்றிய அரசு கொடுக்கும் நிதி தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. உதாரணமாக, 2023 - 2024 ஆம் ஆண்டில் ரூ. 27 ஆயிரத்து 445கோடி ரூபாய் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், ரூ. 26ஆயிரத்து 996 கோடி ரூபாய் தான் வந்துள்ளது. அடுத்த 2024-2025 ஆம் ஆண்டில் அது இன்னும் குறைந்து ரூ.23 ஆயிரத்து 354 கோடி ரூபாய் வரும் என தெரிகிறது. எனவே, மானியமும் உதவித்தொகையும் மாநிலங்களில் தமிழகத்திற்கு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

ஒட்டுமொத்தமா இந்தியா முழுவதும் 2024 - 2025 ஆம் ஆண்டில் அவர்கள் பிரித்துக் கொடுக்கக்கூடிய இந்த மானியத்தொகை என்பது 8 லட்சத்து 90 ஆயிரத்து 858 கோடி ரூபாய். அதில் தமிழ்நாட்டிற்கு 23 ஆயிரத்து 354 கோடி ரூபாய் தான். அதாவது 2.6% மட்டும்தான் பல்வேறு உதவி மானியமாக இதை வழங்குகிறார்கள்.

வரிப்பகிர்வை பொறுத்தவரை சென்ற ஆண்டு ரூபாய் 41 ஆயிரத்து 665 கோடி ரூபாய் எதிர்பார்த்தோம். ஆனால் 45 ஆயிரத்து 53கோடி ரூபாய் வந்தது, இது சாதனை என பாஜகவினர் சொல்கிறார்கள். இது சாதனை கிடையாது. மக்களிடம் இருந்து அதிகமான வரியை ஒன்றிய அரசு வசூலித்துள்ளது என்று தான் பார்க்க வேண்டும். ஏனெனில் சதவீதத்தில் மாறவே இல்லை. ஒன்றிய அரசு 10 லட்சத்து 21 ஆயிரத்து 448 கோடி ரூபாயை 2023 - 2024 ஆம் ஆண்டில் எல்லா மாநிலங்களுக்கும் பிரித்துக்கொடுக்கும் என எதிர்பார்த்தோம். அந்த 10.21 லட்சம் கோடிககளில் 41 ஆயிரத்து 665 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருமென்று எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக வரிவசூல் ஆனதினால் கூடுதலாக பிரித்துக் கொடுத்தார்கள். 10.21 லட்சம் கோடிகளுக்கு பதிலாக 11.1 லட்சம் கோடிகளாக பிரித்துக் கொடுத்தார்கள். அதனால் நமக்கு 41 ஆயிரத்து 66 கோடி என்பது 45 ஆயிரத்து 53கோடியாக மாறியது. இந்த வித்தியாசம் என்பது மத்திய அரசின் வரி அதிகமானதால் வந்த விளைவு. மற்றபடி சதவீதமாக பார்த்தோமானால் 2023- 2024 களில் இருந்தது போலவே 2024-2025களிலும் 4% தான்.

ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் 20214 -2015களில் கடைசியாக போகும்போது இடைக்கால பட்ஜெட்டில் கொடுத்த தொகை 4.9%. காங்கிரஸ் கொடுத்த 5 சதவீதத்தை 4% ஆக குறைத்தது தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாதனையாக உள்ளது.

எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு 6/2/24 அன்று ராஜ்யசபாவில் நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை இந்த பதிலைக் கொடுத்தார்கள். 2018ல் இருந்து 2023 வரை பல்வேறு வரிகள் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து 6 லட்சத்து 674.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளோம். ஆனால் அதே 2018- 2023 ஆண்டுகளில் நாங்கள் திருப்பிக் கொடுத்தது 1 லட்சத்து 58 ஆயிரத்து 145 கோடி ரூபாய் மட்டும் தான். அதாவது 100 ரூபாய்க்கு 26 ரூபாய் திருப்பிக் கொடுத்தோம் என்பது திமுகவின் கணக்கு இல்லை. ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக கொடுத்த கணக்கு. வரிப்பகிர்வு, மானியங்களில் இரண்டிலும் தமிழகத்திற்கான வருவாய் குறைந்துகொண்டே வருகிறது. இதை தமிழ்நாட்டின் பட்ஜெட்டும் சொல்கிறது. ஒன்றிய அரசின் பதிலும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com