பல்டி அடித்தாரா திமுக MLA? மார்கண்டேயன் சொன்னது என்ன? பரபரப்பு பேட்டி!
தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன், விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் மிரட்டல் பேச்சு பேசியதால் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து சட்டப்பேரவையில் “நான் பேசியதை மறந்துவிடுங்கள்” என சபாநாயகரிடம் கூறினார். ஆனால் இன்று குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்து வைக்கும் போது, திமுகவினரை முடக்க முடியாது, திமுக அச்சமில்லா ஜனநாயகக் கட்சி என சவாலாக பேசி புதிய சர்ச்சை கிளப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய்-க்கு மிரட்டல் விடுக்கும் வகையில், விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன் பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர், நிபந்தனை ஜாமீன் பெற்று கடந்த 4-ம் தேதி அன்று, சிறையில் இருந்து வெளியே வந்த மார்கண்டேயன், நேற்று நடைபெற்ற, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விஜய் குறித்து நான் பேசியது சரியல்ல என்று தான், உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகள் என்னிடம் கூறினார்கள். எனவே, நான் பேசிய வார்த்தையை மறந்துவிடுங்கள் என்று சபாநாயகரிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் நிபந்தனையின் படி, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில், கையெழுத்துப் போடுவதற்காக இன்று மார்கண்டேயன் வருகை தந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவினரை கைது செய்து முடக்க முடியுமா? அப்படி எல்லாம் முடக்க முடியாது என்று சவால் விடும் வகையில் பேசினார்.
மேலும், திமுக அச்சப்படும் கட்சியே கிடையாது. ஜனநாயகத்தில் கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க கூடிய அரசியல் கட்சி என்று கூறிய மார்கண்டேயன், முதல்வர் பக்குவமாக நடந்துக் கொண்டால் பிரச்சனை எதுவும் இல்லை என்றும், இந்த அரசு தீவிரவாதிகளை நடத்துவது போல், சட்டமன்ற உறுப்பினர்களை நடத்துகிறது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, நான் பேசியதை மறந்துவிடுங்கள் என்று நேற்று சட்டப்பேரவையில் கூறினீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், நேரத்தை வீணடிப்பதால் நான் பேசியதை மறந்துவிடுங்கள் என்று கூறியதாக தெரிவித்தார்.

