’ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்..’ தவறாக முழக்கமிட்ட விசிக நிர்வாகி! மைக்கை பிடுங்கிய திமுகவினர்!
கரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் விசிக நிர்வாகி தவறாக ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவினர் மைக்கை பிடுங்கி பாஜக அரசை கண்டித்தனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MNREGA) கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, கிராமப் புறத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இத்திட்டத்தின் பெயரான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை மாற்றி ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) என மாற்ற நாடாளுமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில், திமுக சார்பிலுல் கரூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்து அதன் பிரதான கொள்கைகளை மாற்றியிருக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர். அக்கூட்டத்தில் விசிகவை சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அப்போது விசிக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை முழக்கமிடுகையில், ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கின்றோம் என்பதற்கு பதிலாக ’ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம்’ என்று தவறாக முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே திமுக நிர்வாகிகள் அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கி பாஜக அரசை கண்டிக்கின்றோம் என்று முழக்கமிட்டனர். இச்சம்பவம் கட்சியினரிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..

