துரைமுருகன் பொறுப்பை கைமாற்றும் திமுக? கையிலெடுக்கும் முக்கிய நிர்வாகி.. பின்னணி என்ன?
2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிகள் இன்னும் முழுமையாக முடிவாகாதபட்சத்தில் தமிழகத்தில் 4 முனைப் போட்டிதான் நிலவும் என்ற பேச்சு இருந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் வெற்றியை இலக்காகக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேர்தல் அறிக்கை தயார் செய்வது, விருப்பமனு பெறுவது, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றன. சூழல் இப்படியிருக்க, திமுகவின் மூத்த அரசியல்வாதியான அமைச்சர் துரைமுருகனின் பொறுப்பை மேற்கொள்ள முக்கிய நிர்வாகி ஒருவரை தேர்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனிமொழி அல்லது டி.ஆர்.பாலு ?: திமுகவின் புதிய பொறுப்பாளர் யார்?
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், தேர்தல் காலத்தில் அவரால் தொடர்ந்து கட்சி பணியாற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர்களுக்கான ஃபார்மில் கையெழுத்திடுவது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் உள்ளன. இதையடுத்து, அவரது பணியினை கூடுதலாக கவனித்துக்கொள்ள, கட்சி விதியின்படி திமுக துணை பொதுச் செயலாளர்களுக்கு உண்டு.
எனவே கூடுதல் பொறுப்பு, துணைப் பொதுச் செயலாளராக உள்ள கனிமொழிக்கு கொடுப்பதா அல்லது கட்சியில் மூத்த தலைவராக உள்ள பொருளாளர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலுவிற்கு கொடுப்பதா என்று கட்சித் தலைமை ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. எனவே, பொதுச் செயலாளர் பணியின் கூடுதல் பொறுப்பை கவனித்துக்கொள்ள டி.ஆர்.பாலுவிற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏனென்றால், ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் தலைமை கழகம் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

