ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
ஸ்டாலின், செல்வப்பெருந்தகைPt web

’பொறுமைக்கு எல்லையுண்டு’ - தாகூர், பிரவீன் மீது கடும் அதிருப்தி.. காங்கிரஸுக்கு திமுக எச்சரிக்கை?

சர்ச்சை பேச்சாளர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைமை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்துப் பார்க்கலாம்.
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த திமுக - காங்கிரஸ் இடையிலான சுமுக உறவில், தற்போது விரிசல் தென்பட தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் முன்வைத்த ‘ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு’ முழக்கத்தைக் காங்கிரஸ் தன் கையில் எடுத்துகொண்டதுதான் இந்த விரிசலின் தொடக்கப் புள்ளி. சமீப காலமாகவே, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி இருவரும் கூட்டணி ஆட்சி தொடர்பாகப் பேசிவந்தனர். தவிர, தவெக தலைவர் விஜய்யின் செல்வாக்கைத் தூக்கிப்பிடிக்கும் வகையிலும் திமுக அரசை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலுமான குரல்களையும் காங்கிரஸார் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர்.

கோ. தளபதி, ராஜ கண்ணப்பன்
கோ. தளபதி, ராஜ கண்ணப்பன்Pt web

ஆரம்பத்தில் திமுக இதையெல்லாம் புறந்தள்ளவே செய்தது. ஆயினும், ஒருகட்டத்தில் திமுகவின் மதுரை மாவட்டச் செயலர் கோ. தளபதி பொதுக்கூட்டம் ஒன்றில் வெடித்தார். “வாக்குச்சாவடிக்குக்கூட ஆள் இல்லாத கட்சி” என்று அவர் பேசினார். இதற்கு பதிலடி தருகிறோம் என்ற பெயரில் மாணிக்கம் தாகூர் மேலும் பேசலானபோது, “ஓரிருவர் இருந்துகொண்டு உயிரை எடுக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்” என்று இன்னொரு கூட்டத்தில் பேசினார் அமைச்சர் ராஜகண்ணப்பன். முக்கியமான விஷயம் என்னவென்றால், திமுக, காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே இந்த இருவர் நீங்கலாக ஏனையோர் கூட்டணி தொடர்பாக அமைதியே காத்தனர். ஆயினும், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ‘ஆட்சியில் பங்கு’ எனும் முழக்கத்தை மட்டும் வெவ்வேறு குரல்களில் ஆதரித்தனர்.

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
‘ஆட்சியில் பங்கு வேண்டும்..’ டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு தமிழ்நாட்டிலிருந்து பறந்த மின்னஞ்சல்கள்!

இத்தகு சூழலில், கூட்டணிப் பேச்சு தொடர்பாக குழு அமைத்தது காங்கிரஸ். ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்… இப்படி பல விஷயங்களும் காங்கிரஸ் எதிர்பார்ப்புகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆயினும், காங்கிரஸுடன் பேச திமுக உடனடியாக குழுவை நியமிக்கவில்லை. இதனூடாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை இரு சந்தர்ப்பங்களில் ராகுல் காந்தி சந்தித்தபோதும், ‘ஆட்சியில் பங்கு’ விஷயத்தை அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. கூட்டணி தொடர்பில் மூத்த தலைவர்கள் பெரும்பான்மையினர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசிய நிலையில், இளைய தலைவர்கள் கணிசமானோர் தவெகவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். எதுவாயினும், திமுகவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று சொன்ன ராகுல் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார்.

கிரிஷ் சோடங்கர்
கிரிஷ் சோடங்கர்Pt web

இதையொட்டி, தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப்பெருந்தகை இருவரும், “திமுக உடனடியாக பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும்” என அழுத்தம் கொடுத்தனர். ஆனால், “பிப்ரவரி 22க்குப் பிறகுதான் பேச்சுவார்த்தை” என சூசக மொழியில் அறிக்கை வழியே தெரிவித்த திமுக, காங்கிரஸின் அழுத்தத்திற்குத் தான் பணியப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. அடுத்த சில நாட்களில், நடந்த ‘இண்டியா டுவே’ கருத்தரங்கில், “கூட்டணி தொடரும், ஆனால் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை” எனத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், காங்கிரஸார் விட்டபாடில்லை. “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என மாணிக்கம் தாகூர் பங்கேற்ற மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
ஆட்சியதிகார கோரிக்கை | பங்கு கேட்கும் காங்.. கைவிடாத விசிக.. திருமா சொல்வது என்ன?

கூடவே, திமுக செயல்பாடுகளை மறைமுகமாக காட்டமாக விமர்சித்தார் மாணிக்கம் தாகூர். அடுத்து அதே நாளில், “மகளிருக்கு நிதி வழங்கும் திட்டம் மட்டுமே வெற்றியைத் தந்திடும் என்று நம்புவது மூடத்தனம்” என்று ட்விட் செய்தார் பிரவீன் சக்கரவர்த்தி. தொடர்ந்து ஆட்சியில் பங்கு விஷயத்தை வலியுறுத்தி மேலிடத்துக்கு கூட்டு மின்னஞ்சல்களை அனுப்பினர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள். இத்தகு சூழலில்தான் “பொறுத்தது போதும்” என்ற நிலைப்பாட்டுக்குத் திமுக தலைமை வந்துவிட்டதாக தெரிவிக்கிறது ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தி. “தொடர்ந்து திமுகவை விமர்சித்துவரும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி இருவர் மீதான தங்களது அதிருப்தியை தமிழக காங்கிரஸ் தலைவரிடம் தெரிவித்துள்ள திமுக, இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸை அழைக்கப்போவதில்லை எனும் முடிவுக்கு வந்திருப்பதாக” தெரிவிக்கிறது ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தி.

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்web

திமுக தலைமையின் உக்கிர பார்வை விளைவாகத்தான் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் குரலில் பேட்டி அளித்ததாகவும், உடனடியாக பெங்களூரு சென்று கார்கேவைச் சந்தித்ததாகவும், திமுக தலைமையின் முடிவை கார்கேவுக்கு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் மாணிக்கம் தாகூர் மௌனமாகவில்லை. “அச்சமில்லை… அச்சமில்லை” என்று ட்விட் செய்திருக்கிறார். தலைமையின் கண்ணசைவு இல்லாமல் இப்படி ஒருவர் செயல்பட முடியுமா அல்லது காங்கிரஸிலிருந்து வெளியேறும் முடிவில் தாகூர் இருக்கிறாரா என்ற கேள்விகள் காங்கிரஸுக்குள்ளேயே சுற்றுகின்றன. அடுத்து என்னவாகும் என்ற கேள்வியினூடாக நகர்கிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி!

ஸ்டாலின், செல்வப்பெருந்தகை
காங்கிரஸில் முற்றும் மோதல்| ”கே.சி. வேணுகோபால் ஒரு ரவுடி..” - மணிசங்கர் அய்யர் கடும் தாக்குதல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com