தவெக ஆதரவு விவகாரம் | காங்கிரஸைச் சாடிய திமுக.. பதிலடி கொடுத்த கார்த்திக் சிதம்பரம்!
தவெக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், அதற்கு பெரும்பான்மை கிடைக்கிறது. இந்தச் சூழலில் திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ், அதிலிருந்து விலகி, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் திமுக அதிருப்தியில் இருக்கும் நிலையில், காங்கிரஸுக்கு எதிராக விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு காங்கிரஸின் கார்த்தி சிதம்பர்ம் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதும், அது ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, மாற்றுக் கட்சிகளின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது. அந்த வகையில், திமுக கூட்டணியில் 10 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் அதிலிருந்து விலகி, தற்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது, சமீபத்திய தேர்தலில், 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5இல் வெற்றிபெற்றிருந்தது. மேலும், இக்கட்சி தவெகவுடன் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணியே தொடரும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது, திமுகவுக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸின் இந்தச் செயலுக்கு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, இந்த நடவடிக்கையை திமுக ’’ஒரு துரோகம்’’ என வர்ணித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் ஆனந்ததுரை, "காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு துரோகம் செய்துவிட்டது. அவர்கள், தமிழக மக்களுக்குத் துரோகம் செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், “ஐரோப்பிய உதாரணங்களைப் பார்த்தால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் இப்படித்தான் செயல்படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். ஒன்றுக்கொன்று மிகவும் முரண்பட்ட கட்சிகள்கூட, மக்களுக்கு ஒரு நிலையான அரசாங்கம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒன்றிணைகின்றன. ஸ்டாலின் மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். அவர் கள யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறார்.
மற்ற அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புகளையும் அவர் புரிந்துகொள்கிறார். இதை அவர் புரிந்துகொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றல்ல, ஆனால் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு நிலையான மற்றும் மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைக்க கட்சி உதவ வேண்டும், அதைத்தான் காங்கிரஸ் செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மக்களின் தீர்ப்பை மதிக்கிறது. ஒரு கூட்டணியில் தேர்தலில் போட்டியிட்ட எவரும் தங்கள் பதவியில் மட்டுமே உறுதியாக இருப்பார்கள் என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுத்தால், நமக்கு அரசாங்கம் அமையாது. தமிழக மக்கள் விரும்பியது இதுவல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

