"திமுக - அதிமுக உள்ளூர் எதிரிகள்: 2026ல் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும்" - சீமான் நம்பிக்கை

வருகின்ற 2026ல் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். அது தமிழர்களுக்கான ஆட்சியாக அமையும் என நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது சீமான்
பத்திரிகையாளர் சந்திப்பின் போது சீமான் File image

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு, தேர்தல் வரும்போது மட்டும் பேசப்படுகிறது. இட ஒதுக்கீட்டைக் காங்கிரஸ் ஆதரிக்கின்றது. ஆனால் ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் செய்யவில்லை. அதேபோல 10 ஆண்டுக் கால ஆட்சியில் தேர்தலுக்குக் குறுகிய காலத்தில் பாஜக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வாக்கைக் குறிவைத்து மட்டுமே எடுக்கப்படும் நடவடிக்கை.

தேர்தல் அரசியல் மட்டுமே செய்தால், மக்கள் அரசியல் எப்போது செய்வீர்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கொடுத்தால் பெண்களுக்கு 60 சதவீதம் கொடுக்க வேண்டிய நிலை வரும். இந்த இட ஒதுக்கீட்டை அனைத்து அரசியல் கட்சியிலும் செயல்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கொடுத்ததாகக் கூறுவது ஏமாற்று வேலை.

சீமான்
சீமான்

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுப்பது அவசியமான ஒன்று இதைத்தான் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். முதலில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திலும், திமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் முன்வர வேண்டும். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த கோருகிறார். தனது சமூகம் 20 விழுக்காடு இருப்பதாகக் கூறுகிறார். இதனைக் கணக்கெடுத்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும் அவ்வாறு 20% இல்லை என்றால் அதற்குரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுத்தால் போதுமானது. இதனை ராமதாஸ் ஏற்றுக்கொள்வார்.

வயது முதியவர் ஒருவர் தனது குடும்ப அட்டைக்கு 10 கிலோ ரேஷன் அரிசி வாங்கும் அதே கடையில், ஆறு பேர் உறுப்பினர் உள்ள ரேஷன் அட்டைக்கும் 10 கிலோ வழங்குவது என்ன நியாயம். அதைப்போலத்தான் சாதிவாரி கணக்கெடுப்பு விவரம் இல்லாமல் பல சமூகங்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளது. அந்தந்த சமூகத்துக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை அமைச்சரவையினும் வழங்க வேண்டும். எனவே சாதிவாரி கணக்கெடுப்புடன் சேர்த்து மொழிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.

யுகாதிக்கு, குருநானக் பிறந்தநாள் போன்ற வெளி மாநில நிகழ்ச்சிகளுக்குத் தமிழகத்தில் விடுமுறை விடுகின்ற நிலையில் திருவள்ளுவருக்கும், தை முதல் நாளுக்கும், தைப்பூசத்துக்கும் மற்ற மாநிலங்களில் ஏன் விடுமுறை விடுவதில்லை. இங்குப் பிற மொழியாளர்கள் 9 அமைச்சர்கள் உள்ளனர். 50 பேருக்கு மேல் பிற மொழியாளர்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இந்த நிலை மற்ற மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அதில் சாதிவாரி கணக்கெடுப்போடு சேர்த்து மொழி வாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.

நெய்வேலியில் மின்சாரத்தைத் தடை செய்வோம் என்று போராட்டம் நடத்திய போது துணை இராணுவ படையை அழைத்து வந்து போராட்டத்தை ஒடுக்கியவர்கள், கர்நாடகத்தில் தண்ணீர் தர முடியாது என்று பிரச்சனை செய்வதும் கலவரத்தை ஏற்படுத்துவதுமான நிலை உள்ளது அதனை ராணுவத்தை அழைத்து வந்து ஏன் கட்டுப்படுத்தவில்லை. இவற்றையெல்லாம் தேசப்பற்று, இறையாண்மை பேசுகின்ற நபர்களின் வாயில் புற்றுநோய் வந்துள்ளதா. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

30 கோடி மக்கள் தொகை இருக்கும்போது 534 எம்பி தொகுதிகள் உருவாக்கப்பட்டன. மக்கள் தொகை 130 கோடியாக உயர்ந்த நிலையிலும் அதே 534 தொகுதிகள் என்பதை எப்படி ஏற்க முடியும். எனவே ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு எம்பி என்பதை 3 தொகுதிகளுக்கு ஒரு எம்.பி என மாற்றி அமைக்க வேண்டும். இதன்மூலம் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதற்கெல்லாம் நீதிமன்றம் சென்றால் தீர்வு கிடைக்காது. ஒரே அறிவிப்பின் மூலம் பணமதிப்பிழப்பு செய்ய முடிகிறது.

விவாதங்களே இல்லாமல் மசோதாக்கள் சட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கவலை தெரிவிக்கிறார்கள். காவிரி நதிநீர் கேட்ட முதல்வரைக் கர்நாடகத்தில் அவமதித்து போராட்டங்கள் நடக்கின்றன. அவ்வாறு அவமதித்தவர்கள் மீது வழக்குப் போட மறுக்கின்றனர். தமிழக அரசு கண்டிக்கவில்லை. இந்த நிலையில், தமிழகத்தின் உரிமை உள்ள நீரைப் பங்கிட மறுக்கின்ற கட்சியுடன் எதற்காக திமுக கூட்டணி வைத்திருக்கின்றது.

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் - பாஜக தான் முதல் எதிரி, திமுக - அதிமுக உள்ளூர் எதிரி இவர்களை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டது. அதனை இந்திய அரசால் நடத்த முடியாமல் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் வழியாக நடத்துவது ஏன்? நீட் தேர்வின் மூலம் வெற்றி பெற்று வருகின்ற மாணவர்களுக்குப் பாடம் நடத்த, அதே பாடத்திட்டமும் அதே ஆசிரியர்களும் இருக்கும்போது நீட் தேர்வினால் என்ன பயன்கிடைக்கப் போகிறது. 2026 இல் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். அது தமிழர்களுக்கான ஆட்சியாக இருக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com