2005 முதல் 2026 வரை.. சாதனைகளும் சோதனைகளும்.. மீளுமா தேமுதிக? நாளை மாநாடு!
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் நாளை நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேமுதிகவின், கடந்தகால சாதனைகள், சோதனைகள் என்ன? இப்போது பார்க்கலாம்....
திரையுலகில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த், 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ கட்சியை மிகப் பிரம்மாண்டமாக தொடங்கினார். அதேவேகத்தில், 2006 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது தேமுதிக. இதில், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றாலும், 8.4 சதவீத வாக்குகளை பெற்றது தேமுதிக. அதன் தொடர்ச்சியாக 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 39 தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் 10.3 சதவீத வாக்குகளை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2011 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, 41 இடங்களில் போட்டியிட்டு 29இல் வெற்றிபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றிபெற்று, முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால், இந்தமுறை தேமுதிகவின் வாக்கு விகிதம் 7.9ஆகச் சரிந்தது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த தேமுதிக, 14 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. வாக்குச் சதவிகிதமும் 5.1 ஆக குறைந்தது. சட்டமன்றத் தேர்தலில் விசிக, மதிமுக, இடதுசாரிகள் அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது தேமுதிக. இரு திராவிடக் கட்சிகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த மக்கள் நலக் கூட்டணியில், 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக, ஒன்றில்கூட வெற்றி பெறாமல், 2.41 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வியடைந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, 4 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்தது; வாக்கு விகிதமும் 2.19% ஆக குறைந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, போட்டியிட்ட 60 தொகுதியிலும் தோல்வியை சந்தித்து. 0.43% வாக்குகளை மட்டுமே பெற்றது.
இதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, போட்டியிட்ட 5 தொகுதியிலும் தோல்வியைச் சந்தித்தது, 2.59 சதவீத வாக்குகளைப் பெற்றது. விஜயகாந்த்தின் அரசியல் வாரிசான விஜய பிரபாகர் மட்டுமே கணிசமானவாக்குகளுடன் கவனம் ஈர்த்தார். பெரும் எழுச்சியுடன் தொடங்கப்பட்ட தேமுதிகவின் தற்போது அரசியல்அதிகாரத்தையும், வாக்கு வங்கியையும் இழந்திருந்தாலும், புதிய வெற்றிக்கணக்கைத் தொடங்குவதற்கான வேலைகளில்இறங்கியிருக்கிறது. தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்,
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். திமுக, அதிமுக இருகட்சிகளையும் சமதூரத்தில் வைத்தே அவர் பேசிவந்தார். இந்தச் சூழலில்தான் கடலூரியில் உரிமை மீடபு மாநாட்டை நடத்துகிறது தேமுதிக. தேர்தலில் தேமுதிக எந்தக்கூட்டணியில் இணையும், அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள் எத்தனை? உள்ளிட்ட அனைத்தும் அக்கட்சியின் கடலூர் மாநாட்டில் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், தனது கடந்தகால சோதனைகளில் இருந்து மீளவேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது குறிப்பிடத்தக்கது.

