திடீரென ஜெயலலிதாவை கையில் எடுத்த தேமுதிக.. திமுக Vs அதிமுக - எந்த பக்கம் செல்கிறார் பிரேமலதா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துடன், அவரைப் போன்றே கையசைத்தபடி பிரேமலதா நிற்கும் ஃபோட்டோவை பகிர்ந்து அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறார் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ். தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது என்கிற கேள்வி, அவ்வப்போது அடிபடும் நிலையில், வெளியிட்ட இந்த புகைப்படத்தால் தேமுதிக சொல்ல வரும் சேதி என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. இந்த நேரத்தில், இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. அந்த தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, ஐந்து தொகுதிகளைப் பெற்று, ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரியது. இந்த விஷயத்தில் அதிமுக உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கூட்டணி குறித்து தேமுதிக மறுபரிசீலனை செய்யும் என பிரேமலதா தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்து ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநாட்டிலேயே அறிவிப்போம் என்று கூறினாலும், சமீபத்தில் திமுகவுடன் தேமுதிக காட்டும் நெருக்கம் பேசுபொருளாகியுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசியதால் கூட்டணிக்கு அச்சாரம் என்றெல்லாம் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அந்த சந்திப்பில், முதல்வரின் உடல்நலம் குறித்தே பிரதானமாக பேசப்பட்டதாக தேமுதிக தரப்பு விளக்கியது. கூட்டணி குறித்து பேச்சுகள் ஓடியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆம், ஆளும் திமுக அரசு மீது வைக்கும் விமர்சனத்தை ஒரு வித மிதமான போக்கிலேயே (soft tone) அணுகி வருகிறது. இதனால், திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறதா என்கிற கேள்வி எழுந்தபோது, சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே கூறியிருந்தார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
நிலைமை இப்படியாக இருக்க, ஜெயலலிதா ஸ்டைலில் பிரேமலதா ஃபோஸ் கொடுக்கும் ஃபோட்டோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ். சமீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின்போது பேட்டியளித்த பிரேமலதா, விஜயகாந்த் ஃபோட்டோவை எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக்கூடாது என்று திடீர் தடை போட்டிருந்தார். 2026ல் தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகள் வேண்டுமானால் விஜயகாந்த் ஃபோட்டோவை பயன்படுத்தலாம் என்று அவர் போட்ட கண்டிஷன் பேசுபொருளானது.
வரும் 21ம் தேதி மதுரையில் விஜய் நடத்தும் மாநாட்டில், விஜயகாந்த் படம் ஏதும் இடம்பெற்றுவிடுமோ என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவே, பிரேமலதா இந்த தடையை போட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த நிலையில்தான், ஜெயலலிதாவின் ஃபோட்டோவுடன், அவரைப்போலவே ஃபோட்டோவை பகிர்ந்திருக்கும் தேமுதிகவின் பதிவு பேசுபொருளாகியுள்ளது. இந்த பதிவின் மூலம், ஜெயலலிதா தான் தனது ரோல் மாடல் என்று பிரேமலதா நிறுவ நினைக்கிறாரா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் சிக்கல் இல்லை என்பதை சொல்ல நினைக்கிறாரா என்கிற கேள்வி எழுகிறது.
ஆம், தேமுதிகவுக்கு அதன் நிறுவனரான விஜயகாந்த்தே ரோல் மாடல்தான். செய்தியாளர் சந்திப்பில் எந்த கேள்வியை கேட்டாலும், கேப்டன் சொன்னதுபோல என்று, அவர் சொன்னதையே ரிப்பீட் மோடில் சொல்வார் பிரேமலதா. ஆக, தேமுதிகவுக்கு அதன் நிறுவனரே ரோல் மாடலாக இருக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ரோல் மாடலாக எடுக்கிறார்களா.. அப்படி பார்த்தால், தேமுதிக எப்படி விஜயகாந்த் ஃபோட்டோவை பயன்படுத்தக்கூடாது என்று கண்டிஷன் போடுகிறதோ, அதே போல அதிமுகவும் சொன்னால் என்ன ஆகும் என்ற கேள்விகள் எழுகின்றன. ஆக, 2026ல் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க எந்த பிரச்னையும் இல்லை என்பதை தேமுதிக மறைமுகமாக சொல்வதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஒரே நேரத்தில், திமுகவுடன் நெருக்கம் காட்டுவது, அதிமுக கூட்டணிக்கும் சமிஞ்சை கொடுப்பது என்கிற போக்கு, கூட்டணி பேரத்தை கூட்டும் கணக்குதான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் நுழையாத தேமுதிக, 2026ல் நிச்சயம் வெற்றிக்கூட்டணியில் இடம்பெற வேண்டும்.. சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற வேண்டும் என்று முனைப்பு காட்டிவருவதாகவும் கூறுகின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.
வெற்றிக்காக, தேமுதிக எந்தப்பக்கம் செல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். திமுக, அதிமுக அல்லது தவெக.. எந்த கூட்டணியில் இடம்பெறுவது தேமுதிகவுக்கு சாதகமாகும் என்ற உங்கள் கருத்தை கமெண்ட்டில் குறிப்பிடுங்கள்.