சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் விஜயகாந்த் உடல் - தேமுதிக அறிவிப்பு

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது.
நடிகர் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த்PT

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். முதலில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். பொதுமக்கள் திரண்டு வருவதால் தற்போது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேட்டில் இட நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், அண்ணாமலை, கருணாஸ் போன்றோர் அவரது உடலை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை சென்னை, 29.12.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.

கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com