
தொடர் கனமழையால், காவிரி படுகை மாவட்டங்களில் இரண்டரை லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், நாகையில் 82 ஆயிரம் ஏக்கர் பயிர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. திருவாரூரில் 48 ஆயிரம் ஏக்கர் பயிர்களும், தஞ்சையில் 15 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், புதுக்கோட்டையில் 10 ஆயிரம் ஏக்கரும், காரைக்காலில் 11 ஆயிரம் ஏக்கரும் நீரில் மூழ்கி உள்ளன. விளைநிலங்களில் நீர் தேங்கி உள்ளதால், பயிர்கள் முற்றிலும் அழுகி வீணாகும் நிலை உள்ளது.
இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், பயிர் சேதங்களை நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே விவசாய சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.