Ditwah Cyclone | பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் சொல்வதென்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் இலங்கையில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது, அந்த புயல் சென்னையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், வரும் 30 ஆம் தேதி அதிகாலையில், டித்வா புயல் வடதமிழகம், அதனையொட்டி உள்ள வடக்கு ஆந்திரா பகுதியை அடையக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
டித்வா புயல் காரணமாக, காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் 6 மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் அதி கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும், மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில்,வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மாவட்ட ஆட்சியர்களை வீடியோ கால்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களைக் கேட்டிருக்கிறோம். நேற்று என் தலைமையில் உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம். ஏற்கனவே பாதிக்கப்பட்ட இடங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டுமென தெரிவித்திருக்கிறோம். சென்னையிலும் அதிக மழைப்பொழிவு இருக்குமென தெரிவித்திருக்கிறார்கள். முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவசரகால உணவுப்பொருட்ள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

