நெல்லை, பாளையங்கோட்டையில் அதிமுக அழியும் அபாயம்? தொண்டர்கள் வேதனை.. காரணம் என்ன?
செய்தியாளர் மருதுபாண்டி
நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள் தென்மாவட்டங்களில் உள்ள முக்கியமான தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன. இரண்டு தொகுதிகளிலும் திமுக, அதிமுக மாறிமாறி வெற்றி பெற்றுள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜகவிற்கு நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதால், மீண்டும் நெல்லை தொகுதி பாஜகவிற்கு கொடுக்கப்படுமோ என்ற கேள்வி அதிமுகவினர் இடையே எழுந்துள்ளது.
இந்த சூழலில்தான், நெல்லை பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் 2 தொகுதிகளிலும் அதிமுக கட்சியும், தொண்டர்களும் அழிந்து, நெல்லையில் அதிமுக என்ற கட்சி இல்லாத நிலை ஏற்படுமென கட்சித் தலைமைக்கு நெல்லை அதிமுகவினர் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நெல்லை அதிமுக மாநகர முன்னாள் துணைச் செயலாளர் குமார், 2001ஆம் ஆண்டு முதல் நெல்லை தொகுதியில் அதிமுக சரிவை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்தார். அவர் கூறுகையில், “வரும் காலங்களில் பாளையங்கோட்டையும் திருநெல்வேலியும் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்பதற்காக, அந்த இரு தொகுதிகளையும் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
அதிமுக தலைமைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தற்போதைய நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரான் மீதும் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். நயினார் நாகேந்திரன் தொடர்பாக குமார் கூறுகையில், “அதிமுகவிற்கு எந்த நன்மையும் அவரால் இல்லை. ஒருமுறை அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதும் அவரால் யாருக்கும் நன்மை கிடையாது. அவருடைய செயல்பாடுகள் எல்லாம் அவரது சொந்த நலனுக்காகவும் அவருடைய வீட்டு நலனுக்காகவுமே இருந்திருக்கிறது. ஏழை எளிய தொண்டன் அவரிடம் உதவி கேட்டால் எந்த உதவியும் செய்யமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை சரிசெய்ய அதிமுக தலைமை முன்வரவேண்டுமென்பதே நெல்லை அதிமுக நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.