திண்டுக்கல் | பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட தனியார் பள்ளி மாணவர்கள்
செய்தியாளர்: காளிராஜன் த
திண்டுக்கல் மையப் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள், பாலக்காடு, திருப்பதி போன்ற வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பழனி பேருந்து நிற்கும் இடத்திற்கு எதிரே தனியார் பள்ளியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த கடையில் உள்ள பாத்திரங்களை எறிந்தும் சண்டையில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடைக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைத்து மாணவர்களை தடுக்க முற்படும்போது, அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர்.
இதைத் தொடர்ந்து அனைத்தும் முடிந்த பின்பே காவல்துறையினர் அங்கு வந்துள்ளனர். பேருந்து நிலையத்தில் செயல்படும் புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் இல்லாதது. இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாக அமைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.