திண்டுக்கல் | ரயிலில் கடத்திவரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்தியாளர்: காளிராஜன் த
புருலிய - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (30.05.25) காலை 10 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் புருலிய ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி இன்று (01.06.25) அதிகாலை 1.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான ரயில்வே போலீசார், ரயிலில் சோதனை செய்துள்ளனர். அப்போது, ரயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் கேட்பாரற்று இருந்த பைகளை ரயில்வே காவல்துறையின சோதனை செய்துள்ளனர். அதில், 8 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து அருகில் இருந்த பயணிகளிடம் விசாரணை செய்த போது, அந்த பைகள் யாருடையது என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் 8 கிலோ கஞ்சா இருந்த பையை கைப்பற்றி விசாரணை செய்து பின் கஞ்சாவை தமிழ்நாடு போதைப்பொருள் புலனாய்வு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.