தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
செய்தியாளர்: பிரவீண்
திமுக நடத்தும் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி, மற்ற கட்சிகளுக்கு அனுமதி கிடையாதா?
கோவை விமான நிலையத்தில் தெலங்கானா முன்னாள் ஆளுநர் ,தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்... இன்று திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை காவல்துறை கைது செய்து இருக்கின்றதா? இல்லையா? திமுக நடத்தும் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி, மற்ற கட்சிகளுக்கு அனுமதி கிடையாதா. ஸ்டாலின் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது. எதிர் கட்சிகளுக்கு போராட அனுமதி மறுத்து விட்டு, டங்ஸ்டன் விவகாரத்துக்கு போராட வைகோவிற்கு அனுமதி,
உதாசீனப்படுத்தபட்ட தேசிய கீதம். கண்டனம் தெரிவித்த ஆளுநருக்கு எதிிராக போராட்டமா?
அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷாவிற்கு எதிராக போராட திருமாவளவனுக்கு அனுமதி கொடுக்கின்றனர். ஆனால், மற்ற கட்சிகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை. தேசிய கீதம் உதாசீனப்படுத்தபட்டுள்ள நிலையில், அதற்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். ஆனால், அவரை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம் செய்கின்றது அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் தேசிய கீதத்திற்காக ஒரு கோரிக்கை வைத்தார். ஆனால், அதை நிராகரித்துவிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை கண்டிக்கின்றேன்.
காவியை பார்த்து பயந்தீங்க, இப்ப கருப்பு துப்பாட்டாவிற்கு ஏன் பயப்படுறீங்க?
எதிர்க் கட்சிக்கு மட்டும் போராட அனுமதி மறுப்பு, ஆளுங்கட்சிக்கு அனுமதி. தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் உரிமை பறிக்கப்படுகின்றது. அண்ணா பல்கலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். திமுகவினர் யாரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர், உங்கள் ஆட்சியை எதிர்த்தே ஆர்ப்பாட்டமா? 2026 தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய அடியை கொடுக்கும். தேசியத்தின் மீது திமுகவிற்கு எவ்வளவு அக்கறை என்பது தெரியாதா. கருப்பு துப்பட்டா போட்டா உங்களுக்கு என்ன? காவியை பார்த்து பயந்தீங்க, கருப்பு துப்பாட்டாவிற்கு ஏன் பயப்படுறீங்க.
தமிழகத்தில் எமர்ஜென்ஸி ஆட்சி நடக்கிறது:
தமிழகத்தில் எதிர்கட்சிகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த உரிமை மறுக்கபடுகின்றது. தமிழகத்தில் எமர்ஜென்ஸி ஆட்சி நடக்கின்றது, தமிழகத்தில் எல்லா குரல் வளையும் நெறிக்கப்படுகின்றது. திமுக கூட்டணி கட்சிகளின் குரலும் நெறிக்கப்படுகின்றது திமுக கூட்டணி தற்போது வெளவெளத்துப் போயிருக்கின்றது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.