கடலூர் | விடாத கடன் தொல்லை...? தோனியின் தீவிர ரசிகர் எடுத்த விபரீத முடிவு!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தோனிக்காக தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றி, தோனியின் ஓவியத்தை வரைந்து கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கோபிகிருஷ்ணன். இவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனி ரசிகர் மரணம்
தோனி ரசிகர் மரணம்புதிய தலைமுறை

செய்தியாளர் - கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு திருமணம் ஆகி அன்பரசி என்ற மனைவியும், 10 மற்றும் 8 வயதில் இரு மகன்களும், 10 நாட்களே ஆன நிலையில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கோபிகிருஷ்ணன் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். தோனிக்காக தனது சொந்த வீட்டையே மஞ்சள் நிற வர்ணம் பூசிய இவர், அதன் சுவர்களில் தோனியின் படங்களை வரைந்தும் வைத்துள்ளார். கோபிகிருஷ்ணன் முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரில் ஆன்லைன் பிசினஸ் செய்து வந்துள்ளார். பிசினஸ்காக உறவினர்களிடம் பல லட்சம் பணம் வாங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. பிசினஸில் நஷ்டமடைந்ததால் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சல் இருந்து வந்ததாக அவரின் குடும்பத்தார் சிலர் கூறுகின்றனர்.

தோனி ரசிகர் மரணம்
‘தற்கொலை தீர்வல்ல மாணவச் செல்வங்களே...’ - நீதிபதி கற்பக விநாயகம் சொன்ன குட்டி கதை!

இந்நிலையில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு அவரது சொந்த ஊரான அரங்கூரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோபி கிருஷ்ணனும் கலந்து கொண்டு விளையாடியுள்ளார். அப்போது அங்கு பணம் கொடுத்த ஒரு தரப்பினர் கொடுத்த பணத்தை கோபிகிருஷ்ணனிடம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் கோபிகிருஷ்ணன் அதிகாலை 2.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பச் சென்றுள்ளார். அங்கு அவரது மனைவியிடம் காணும் பொங்கல் விளையாட்டு போட்டியில் பணம் கொடுத்தவர்கள் தன்னை தாக்கியதாக, கோபிகிருஷ்ணன் சொன்னதாக தெரிகிறது.

பின் இருவரும் வீட்டில் உறங்கி விட்டனர். 3.30 மணி அளவில் கோபிகிருஷ்ணனின் மனைவி எழுந்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த கோபிகிருஷ்ணனை காணவில்லை. வீட்டில் உள்ள மற்றொரு அறை திறந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது கோபிகிருஷ்ணன் சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com