செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கும்பொழுது ஏற்பட்ட தகராறில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) காவேரி என்பவர், உணவக உரிமையாளர் முத்தமிழ் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
இதில் ஒருகட்டத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காவேரி, தனது ஷூவை கழற்றி உணவக உரிமையாளரை தாக்க முயற்சி செய்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் இன்று காலை முதலே வைரலாகின.
வீடியோ வைரலானதை அடுத்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின் பேரில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் விசாரணை நடத்தினார். இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.எஸ்.ஐ காவேரி, அடிக்கடி இந்த உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பாதி பணத்தை கொடுத்துவிட்டு மீதியை நாளை தருகிறேன் என்று சொல்லிவிட்டுச் செல்வது தெரிய வந்தது.
அப்படியான நிலையில்தான் நேற்று முன்தினம் உணவகத்திற்கு வந்த எஸ்.எஸ்.ஐ காவேரியிடம் பாக்கிவைத்த பணத்தை உணவக உரிமையாளர் முத்தமிழ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவேரி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூ வை கழட்டி முத்தமிழை அடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இவையாவும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணையில் உறுதியானது.
இதனை அடுத்து இன்று காலை எஸ்.எஸ்.ஐ காவேரியிடம் விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், அவரை தற்காலிக பணியிட நீக்கம் செய்துள்ளார்.