இயல்பு நிலைக்குத் திரும்பிய திருப்பரங்குன்றம் - மலை மீது சென்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
செய்தியாளர்: செ.சுபாஷ்
மதுரை மாவட்டம் முழுவதிலும் கடந்த இரு நாட்களாக 144 தடை உத்தரவு. இந்து முன்னணியின் போராட்டம் காரணமாக அறிவிக்கப்பட்டது. நேற்று கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோயிலுக்குள் பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்து முன்னணி போராட்டம் நீதிமன்றம் உத்தரவின்படி நடந்து முடிந்தது, இதையடுத்து இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதைத் தொடர்ந்து மலை மீதுள்ள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும், தர்காவுக்கும் வழிபாடு செய்வதற்கு பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இயக்கங்களோ, கட்சிகளோ கூட்டமாக செல்வதற்கோ அல்லது பால் குடிநீர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் தவிர மற்ற உணவு பொருட்கள் எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று வழக்கம் போல காலை முதலே முருகனை தரிசனம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.