காட்டுமன்னார்கோவில் | வாகன சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது
செய்தியாளர்: ஆர்.மோகன்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வடவாறு வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்; கடத்தப்படுவதாக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், வடவாறு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரம்ஜான் தைக்கால் பகுதியைச் சேர்ந்த முகம்மது சௌக்கத் அலி (60) என்பவர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட 48 பண்டல் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் மூட்டையை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அரியலூர் மாவட்டம் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த குமரன் என்பவரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்ய எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து பாப்பாக்குடி சென்ற போலீசார், குமரன் மற்றும் சௌகத் அலி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.