இடைக்கால பட்ஜெட்| சென்னைக்கு இத்தனை கோடியில் வளர்ச்சி திட்டங்களா..? நிதியமைச்சரின் நீண்ட பட்டியல்!
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில், சென்னைக்கு 6,500 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வடசென்னை, திருப்போர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள், நீர்த்தேக்கங்கள், மற்றும் மின் மயானங்கள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்டப் பணிகள் 63,246 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய அரசு அமைவது வரையிலான அரசின் செலவினங்களுக்கான நிதிஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும். பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்
சென்னையை சுற்றி இத்தனை கோடி முதலீடுகள்..
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்துவரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு என்னென்ன செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், எதிர்கால திட்டங்கள் என்ன என்பது குறித்தும் பட்டியலை வெளியிட்டார்.
உரையில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்கள், மருத்துவக் கட்டமைப்பு பணிகள், கடற்கரை மேம்படுத்துதல், பூங்காக்கள், விளையாட்டு கட்டமைத்தல் பணிகள், மின் மயானங்கள் அமைத்தல் பணிகள் 6,500 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் 1618 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு அருகே திருப்போரில் 342 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் அண்மையில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
தற்போது தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் மற்றும் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மத்திய கைலாஷ் மேம்பாலம். 45 கோடி மதிப்பீட்டின் மடிப்பாக்கத்தில் வாகன சுரங்கப்பாதை மேம்பட்டு பணிகளும் நடைபெற்ற வருகிறது.
சென்னை மெட்ரோ சேவைக்கான இரண்டாம் கட்டப் பணிகள் 118.9 கி.மீ வரை ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் 2022ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்திய அரசின் மேலாண்மை செயல் திறன் மதிப்பீட்டு தரவரிசையில் தேசிய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
வனவிலங்கு மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை எடுத்துக்காட்டும் வகையில் வன விலங்குகளை பாதுகாக்கும் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தி உள்ளனர். தமிழ்நாடு அரசு ஆறு புதிய வனவிலங்கு சரணாலயங்கள் ஒரு கடல்பசு பாதுகாப்பு காப்பகம் மற்றும் ஒரு யானைகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டுள்ளது” என சென்னை சுற்றி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

