\
TVK Election Campaign
TVK Election CampaignTVK

விஜயின் PRIVATE JET-க்கு மட்டும் 3.55 கோடி: வெளியான தவெகவின் தேர்தல் செலவு | முக்கிய விவரங்கள் என்ன?

தமிழக வெற்றிக்கழகம் தேர்தலுக்கு செலவழித்த தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
Published on: 
Summary

தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் செலவுத் தகவலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டதற்காக 40 லட்சம் செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் கட்சிகள் செலவழித்த தொகை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து வருகின்றன. இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் தேர்தலுக்கு செலவழித்த தொகை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகம் 19.81 கோடியை செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தவெக தலைவர் விஜய்யின் விமான போக்குவரத்துக்கு செலவுக்காக மட்டும் 3.55 கோடியை செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மார்ச் 14 முதல் ஏப்ரல் 28 வரையிலான காலகட்டத்தில் TAI Jets, Chipsan Aviation மற்றும் Fly High Global ஆகிய நிறுவனங்களுக்கு நான்கு தவணைகளாகக் இதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் கட்சியின் பிற தலைவர்களின் பயணங்களுக்கான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை.

ANI

மேலும் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் சேர்த்து 40 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. அதே நேரம் பிற தவெக வேட்பாளர்களின் செலவுகள் இதில் குறிப்பிடப்படவில்லை. அதாவது மற்ற வேட்பாளர்களின் செலவிற்கு கட்சித் தலைமை செலவு செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அச்சு, மின்னணு மற்றும் ஊடக விளம்பரங்களுக்கு 6.35 கோடி செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் 'Voice of Common Strategic Consulting Private Limited' நிறுவனத்திற்கு 1.79 கோடியை தவெக செலுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு கட்சியின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட்ஷோக்களுக்கு 2.06 கோடியும், இதர விளம்பரங்களுக்கு 40.55 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. அதே நேரம் சமூக வலைத்தளங்கள் வாயிலான இணையவழிப் பிரச்சாரத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்த எந்த விவரமும் அதில் இடம்பெறவில்லை. இந்த சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக 197.84 கோடியும், அதிமுக 112.39 கோடியும் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Election Campaign
இந்திய கால்பந்தின் அசத்தல் இரவு : டாப் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்.. வீரர் செய்த தியாகம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com