’2500 நிரந்தர செவிலியர்கள் பணியிடங்கள்..’ தவெக அரசுக்கு ஜனநாயக செவிலியர்கள் சங்கம் நன்றி!
தமிழக சட்டமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்த 2,500 நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கம், நீண்டநாள் கோரிக்கையாக இருந்த ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரத்துக்கு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. 7 முதல் 10 ஆண்டுகள் காத்திருந்த 7,000 எம்ஆர்பி செவிலியர்களில் 2,500 பேருக்கு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் கிடைக்கவிருப்பதை ஜனநாயக செவிலியர்கள் சங்கம் வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவாக வரவேற்கிறது.
செவிலியர்களின் நீண்டநாள் கோரிக்கையானது ஒப்பந்தச் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பது. அரசுப்பணிக்கு வந்தும் நீண்டகாலமாக குறைவான ஊதியத்துடன் வேலைப்பார்க்கும் செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வொரு அரசு மாறும்போதும் கோரிக்கையாக வைத்துவருகின்றனர்.
இந்தசூழலில் இன்று சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்தச் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பணிமூப்பு அடிப்படையில் 2,500 செவிலியர்களைக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அவருடைய அறிவிப்பில் பேசிய அவர், “மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம், ஒப்பந்த செவிலியர்களாக தேர்வு செய்யப்பட்டு, தற்போது பணியிலுள்ள செவிலியர்களின் நீண்டநாள் கோரிக்கையான காலமுறை ஊதியத்தில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியதை பரிசீலித்து, அவர்களின் சேவையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதியதாக 2,500 பணியிடங்கள் காலமுறை ஊதியத்தில் உருவாக்கப்பட்டு பணி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படுவார்கள்.
ஆண்டுதோறும் பட்டப்படிப்பு முடித்து பிணை ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படும் மூளை நரம்பியல், இருதயவியல், சிறுநீரகரவியல், புற்றுநோய் மருந்தியல், குடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட 25 வகையான 284 உயர் சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு, காலமுறை ஊதியத்தில் தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
நவீன, விரிவான மற்றும் எதிர்கால நோக்குடைய புதிய தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் இயற்றப்படும். சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் வகையில் புதிய positive health policy உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் முதன் முறையாக 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பு இன்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். 3594 மருத்துவ பணியாளர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 1695 தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்” என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்தசூழலில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு ஜனநாயக செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்களுடைய அறிவிப்பில், “இன்று சுகாதார துறை அமைச்சர் திரு. அருண்ராஜ் அவர்கள் அறிவித்திருக்கும் 115 விதியின் கீழ், 2500 புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, காத்துக் கொண்டிருக்கும் எம்ஆர்பி செவிலியர்கள் அதில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த அறிவிப்பை ஜனநாயக செவிலியர்கள் சங்கம் வரவேற்கிறது.
இந்த அறிவிப்பை இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மானியகோரிக்கையில் அறிவித்தது செவிலியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் பணி நிரந்தரத்துக்காக கிட்டத்தட்ட 7 முதல் 10 வருடங்கள் காத்திருந்த 7000 செவிலியர்களில் 2500 பேர் பலனடைய உள்ளனர். இதே போல் மகத்தான ஒரு ஆணையின் மூலம் மீதம் இருக்கும் செவிலியர்களும் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

