Delimitation Bill Rejected Tamil Nadu Has Won Stalin
முதல்வர் ஸ்டாலின்Pt web

”தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. ஜனநாயகம் வென்றது” - முதல்வர் ஸ்டாலின்!

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்திருக்கும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதிகள் மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச தொகுதி மறுவரையறை மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் நேற்று ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்தது. தொடர்ந்து, இந்த மசோதா மீதான விவாதம் 2வது நாளாக இன்று நடைபெற்ற நிலையில், மசோதாவுக்கான வாக்கெடுப்பும் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை செய்வதற்கு, 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெற்றது. இந்த மசோதா வெற்றிபெற 3ல் 2 பங்கு அதாவது 326 எம்.பி-களின் ஆதரவு தேவை.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாPt web

இந்த நிலையில் தான், இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 489 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதில், 278 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 211 உறுப்பினர் மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், மசோதா நிறைவேறுவதற்கான பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்கப்படவில்லை. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாக இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்த தொகுதி வரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்திருக்கிறது.

Delimitation Bill Rejected Tamil Nadu Has Won Stalin
Delimitation bill 2026 | தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. 278 பேர் மட்டுமே ஆதரவு!

முன்னதாக, தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்த்து வந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருந்தது. நேற்றைய தினம், திமுக, விசிக உள்ளடக்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மசோதா நகலை முதல்வர் ஸ்டாலின் எரித்திருந்ததும் பேசுபொருளாகியிருந்தது. இந்த சூழலில், இன்று தொகுதி மறுவரையறை மசோதா பெரும்பான்மை இல்லாததால் தோல்வியடைந்துள்ளது.

Delimitation Bill Fails in Parliament Amid Opposition Protest
Delimitation BillPt web

இந்த நிலையில் தான், “ஜனநாயகம் வென்றது” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடியது; தமிழ்நாடு வென்றது. இந்திய ஜனநாயகத்தில் யாருக்குப் பிரதிநிதித்துவம் இருக்கும், யாருடைய குரலுக்கு இடமிருக்கும் என்பதுதான் தொகுதி மறுவரையறை. அது ஒன்றியத்தைப் பலப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய, பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாடு எப்போது நீதி - கண்ணியம் - கூட்டாட்சி ஆகியவற்றுக்காகவே நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது. நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுகொண்ட, நியாயமான நடைமுறையையே நாம் வலியுறுத்தினோம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், நமது பண்பாடு மற்றும் அடையாளத்துக்கும், இந்திய கூட்டாட்சிக்கும் ஊறு வரும்போது, ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி! இந்த அநீதியை எதிர்த்து ஓரணியில் நின்ற அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நன்றி” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com