ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி எதிரொலி.. 8 மாவட்டங்களுக்கு RED அலர்ட்..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியிருக்கிறது. இது வரக்கூடிய நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள், குறிப்பிட்ட பகுதிகளில் 20செமீக்கும் அதிகமான மழை பொழிந்தால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களுக்கும், புதுவைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் போன்ற மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான மஞ்சள் அலர்ட் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 ஆம் தேதிக்கு மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு அதிகனமழைகான சிவப்பு எச்சரிக்கையும், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 23 ஆம் தேதிக்கு சென்நை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பும், உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருமாறுவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு என்றும் கூறப்படுகிறது. ஏனெனில், தென்மேற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருக்கிறது. மிகவும் நெருக்கத்தில் இருப்பதால் தீவிரமடைந்து புயலாக மாற்றமடைவதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.