கடலூர் | என்எல்சி அனல் மின் நிலைய டிரான்ஸ்ஃபார்மரில் தீ விபத்து
செய்தியாளர்: ஸ்ரீதர்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்படும் என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் மின் மாற்றியில் ஏற்பட்ட கசிவின் காரணமாக டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்தது. பல மணி நேரமாக என்எல்சி தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
வெப்பத்தின் தாக்கம் மற்றும் பெரிய அளிவிலான டிரான்ஸ்ஃபார்மர்கள் ஆகிய காரணத்தினால் அதில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால், தீயை கட்டுப்படுத்த தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புத் துறையினர் போராடினர். இந்த தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உயரமட்டக் குழு விசாரணைக்கும் என்எல்சி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது, இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டடத்திற்கு யார் காரணம் என பல்வேறு கோணங்களில் என்எல்சி உயர்மட்டக் குழு இயக்குனர் தலைமையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து என்எல்சி நிர்வாகத்தில் கேட்டதற்கு விசாரணைக்கு பிறகு விபத்து குறித்த காரணங்கள் இழப்பு குறித்த விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.