AC ரயில் பெட்டிகளில் துவைக்கப்படாத போர்வைகள், தலையணைகளா? கள ஆய்வில் தெரியவந்த தகவல்!
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து நாள் ஒன்றுக்கு 34 ரயில்கள் தொலைதூரத்திற்கு பயணிக்கின்றன. அதில் மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிக்கின்றனர்.
சுமார் 22,560 போர்வை மற்றும் தலையணை உரைகள் சலவை செய்யப்பட்டு ரயில் பெட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது. சென்னை பேசின் பிரிட்ஜில் அமைந்துள்ள தெற்கு ரயில்வேக்கு சொந்தமான சலவை தொழிற்சாலையில் போர்வை உள்ளே வருவது முதல் சுத்தம் செய்யப்பட்டு வெளியே செல்வது வரை பெரும்பாலான பணிகள் தானியங்கி இயந்திரம் வாயிலாக நடக்கிறது.
சலவை செய்யாமல் வழங்கப்படுகிறதா?
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில்தான் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் துண்டு, போர்வை, தலையணை உரைகள் போன்றவற்றை துவைப்பதற்கு தானியங்கி தொழிற்சாலை 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு 12 மாதத்திற்கு ஒரு முறையும், புதிய துண்டு, போர்வை போன்றவை ரயில்வேயால் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பெட்டிகளில் பயன்படுத்தப்படும் உறக்கப் பொருட்களும், பயணிகளால் பயன்படுத்தப்பட்டவுடன் சலவை தொழிற்சாலைக்கு வருவது உறுதிப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கிறார், தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி ஓம் பிரகாஷ் நாராயணன்.
அதிகாரிகள் சொல்வது என்ன?
வழங்கப்படும் போர்வைகளுக்கு உள்ளடக்க கவரும் வழங்கப்படும் நிலையில், அனைத்து உறக்கப் பொருட்களும் தூய்மையாக சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பயணிகளுக்கு வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவிக்கிறது.
தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் உள்ளிட்ட குளிர்சாதன பெட்டிகள் அடங்கிய ரயில்களின் எண்ணிக்கை அதிகமாகும் நிலையில் விரைவில் தற்போதுள்ள சலவை தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போர்வைகளை சலவை செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் நம்மிடம் தெரிவிக்கிறார்கள்.