அமைச்சர் உதயநிதியின் வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்; காரணம் என்ன?

தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை மற்றும் சென்னை புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கத்தினர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டனர்.

தீபாவளி பண்டிகை வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக புத்தாடை, இனிப்புகளுக்கு அடுத்ததாக பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம். தீபாவளிக்கு ஒருவாரமே உள்ள நிலையில், தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி சென்னை மற்றும் புறநகர் பட்டாசு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் கூடினர். 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் இதுபோன்று தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி இதுவரை வழங்கப்படாததால் பட்டாசு கடை நடத்தும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தீயணைப்புத் துறையிடம் இதற்காக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு அனுமதிக்காக காத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com