“இதைவிட சரித்திர மோசடி இருக்க முடியாது” - அய்யா வைகுண்டர் குறித்த ஆளுநரின் பேச்சுக்கு அருணன் பதில்!

“அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்க வந்தார் என சொன்னால் இதைவிட சரித்திரமோசடி வேறு இருக்க முடியாது. இது ஏற்கமுடியாத ஒன்று” அருணன்
அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார், அருணன்
அய்யாவழி பால பிரஜாபதி அடிகளார், அருணன்pt web

அய்யா வைகுண்ட சுவாமியின் 192வது அவதார தின விழா மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதான வரலாறு புத்தக வெளியீட்டு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில்கலந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு நூலினை வெளியிட்டு நிகழ்சியில் உரையாற்றினார்.

சனாதனத்தை காக்க அய்யா வைகுண்டர் தோன்றினார்

அப்போது பேசிய அவர், “அய்யா வைகுண்டர் நாராயணின் அவதாரம். வைகுண்டர் தோன்றிய சமூக கலாச்சார காலக்கட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்ப்பட்ட காலக்கட்டம். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதன தர்மத்துக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ராமர், கிருஷ்ணர், வள்ளலார், அய்யா வைகுண்ட நாராயணன் போன்றோர் அவதாரங்களை எடுத்துள்ளனர்” என தெரிவித்திருந்தனர்.

ஆளுநர் தெரியாமல் பேசவில்லை திரிக்கிறார்

ஆளுநரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார், “அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவதுபோல் வரலாற்றை திரித்து ஆரிய கோட்பாட்டற்கு அணி சேர்ப்பது போல் ஆளுநர் பேசுயுள்ளது வருந்ததக்கது. அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் புரிந்து பேச வேண்டும்.

நாராயணன் அவதாரம் என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால் எல்லா புராணங்களிலும் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர் அய்யா. ஜாதியை வகுத்தவனை நீசன் என்று கூறுகிறார் ஐயா., அப்படி பட்ட இடத்தில் சனாதனத்தை ஆதரித்தவர் அய்யா என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அய்யா வைகுண்டரை தனதாக்கி கொண்டு பட்டா போடுவதற்காக அவர்கள் பேசுவதை கண்டிக்கிறோம். ஆளுநர் வரலாற்றை தெரியாமல் பேசவில்லை, திரித்து பேசுகிறார். ஆளுநர் அவரது வேலையை மட்டும் பார்த்தால் போதும், ஆன்மீக பணிகளை மேற்கொள்ள வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

சரித்திர மோசடி - அருணன்

அருணன்
அருணன்

இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிய சிந்தனையாளரும், சமூக ஆய்வாளருமான பேராசிரியர் அருணனை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “திருக்குறள், திருவள்ளுவர் என இதை முதலில் தங்கள் வசம் எடுக்கப் பார்த்தார். பின் வள்ளலாரை கையில் எடுத்தார். வள்ளலார் சனாதனத்தை எதிர்த்து கிளம்பியவர். விக்ரஹம் ஆராதனை இருந்தால் தான் பூசாரி, பூசாரி இருந்தால் தான் சாதி வருகிறது எனக் கூறி ஜோதி வழிபாட்டைக் கொண்டு வந்தவர். இப்போது வைகுண்டர் பக்கம் வந்துள்ளார்கள்.

இதில் இரு விஷயங்கள் உள்ளது. ஒன்று வைகுண்டரை தன் வசப்படுத்துவதன் மூலம் தென் பகுதியில் ஏதேனும் வாய்ப்பு இருக்குமா என பாஜகவினர் பார்க்கிறார்கள். நாடார் குல மக்கள் 19 ஆம் நூற்றாண்டு காலத்திலேயே சாதிய அடிப்படையில் மிகவும் கீழாக நினைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. துண்டு இடுப்பில் கட்டிக்கொள்ளலாம், ஆனால் மேலே போட்டுக்கொள்ளக்கூடாது. அன்றைக்கு இருந்த சாதியத்தை எதிர்த்து வைகுண்டர் கிளம்பினார். வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தவர், சமபந்தி போஜனைகளை கொண்டுவந்தார். தலைப்பாகை கட்டவேண்டாம் என சொல்கிறார்களே, நீங்கள் கட்டுங்கள் என சொன்னார். இப்போதும் அய்யாவழி வந்தோர், அய்யாவை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லாம் தலைப்பாகை கட்டுவார்கள். இவைஎல்லாம் வர்ணாசிரம தர்மத்திற்கும் சனாதனத்திற்கும் எதிரானது. அரசர்களை எதிர்த்தும் போராடினார்.

அரசர்களும் நாடார்குல மக்களை மோசமாக நடத்தினார்கள். அதனாலும் பல இன்னல்களுக்கு ஆளானார். அரசு பல இடஞ்சல்களை கொடுத்தது. மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்தவர். இத்தகையவரை சனாதனத்தை காக்க வந்தார் என சொன்னால் இதைவிட சரித்திரமோசடி வேறு இருக்க முடியாது. இது ஏற்கமுடியாத ஒன்று. பால பிரஜாபதி அடிகளார் சரியான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com